ஆன்லைன் விளையாட்டில் தோல்வி- சக மாணவர்கள் பணம் கேட்டு மிரட்டியதால் வீட்டை விட்டு ஓடிய மாணவன்

10 February 2021

ஆன்லைன் விளையாட்டில் தோல்வி- சக மாணவர்கள் பணம் கேட்டு மிரட்டியதால் வீட்டை விட்டு ஓடிய மாணவன்


கரூரில் ஆன்லைன் விளையாட்டில் சில புள்ளிகளை இழந்த 10-ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் பணம் கேட்டு மிரட்டப்பட்டதால் பயந்து வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகள் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் பெரும் தீங்கை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அடிமையான குழந்தைகள் அதில் இருந்து மீள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கரூரில் ஆன்லைன் விளையாட்டில் சில புள்ளிகளை இழந்த 10-ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் பணம் கேட்டு மிரட்டப்பட்டதால் பயந்து வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் பலராமன் (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததால் பெற்றோர் அவருக்கு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்தனர்.

ஸ்மார்ட்போன் கைக்கு வந்ததும் அந்த மாணவர் பல மணிநேரம் அந்த செல்போனிலேயே மூழ்கி கிடந்தார். ஏதும் அறியாத பெற்றோர், மகன் ஆன்லைனில் நன்றாக படிக்கிறான் என கருதினர். ஆனால் பலராமன் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தது அவர்களுக்கு தெரியவில்லை.

இந்த மாணவர் ப்ரீ பயர் என்ற ஆன்லைன் விளையாட்டு குழுவில் சில 9-ம் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து விளையாடி வந்தார். இதில் அவர் பின்தங்கியும் இருந்துள்ளார். கூட்டு கணக்கில் இருந்து புள்ளிகளை இழந்ததால் அவருடன் விளையாடிய 9-ம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன அந்த மாணவர், கடந்த சனிக்கிழமை தனது செல்போன் மூலம் ஒரு வீடியோ பதிவினை பெற்றோருக்கு அனுப்பி விட்டு வீட்டை விட்டு ஓடினார். அந்த வீடியோ பதிவில் தன்னை யாரும் தேட வேண்டாம் என குறிப்பிட்டு இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி கரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று திருச்சியில் பலராமனை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

ஊரடங்கில் வீட்டில் முடங்கி கிடந்த சூழலில் பெரும்பலான சிறுவர்- சிறுமிகள் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி விட்டனர். இதன் விளைவாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக போலீசார் கவலை தெரிவித்தனர்.

இதுபற்றி பலராமனின் தந்தையிடம் கேட்டபோது, வீட்டை விட்டு ஓடுவதற்கு முன்பாக ஒரு வீடியோ பதிவினை எங்களுக்கு அனுப்பி இருந்தான். அதில் என்னை நீங்கள் தேட வேண்டாம் என குறிப்பிட்டு இருந்தான். நாங்கள் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை.

இதையடுத்து உடனே கரூர் தான்தோன்றிமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தோம். அடுத்த நாள் திருச்சியில் அவனை கண்டுபிடித்தனர். சிறுவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை அரசு தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதுபற்றி தான்தோன்றி மலை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பலராமனிடம் இருந்த சொற்ப பணத்துடன் திருச்சி பஸ்சில் ஏறிச்சென்றுள்ளான். பின்னர் திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் சாப்பிட பணம் இல்லாமல் பசியுடன் சுற்றி திரிந்தான். அப்போது ஒரு நபர் அவனுக்கு உணவு வாங்கி கொடுத்துவிட்டு மலைக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் அவனை மீட்டு சென்றனர்.

பின்னர் நாங்கள் திருச்சி சென்று அழைத்து பெற்றோர் வசம் ஒப்படைத்தோம். அவனை காந்தி கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் மிரட்டியுள்ளனர். அந்த மாணவர்களின் பெற்றோருக்கு சம்மன் அனுப்பி அந்த சிறுவர்களை எச்சரித்து அனுப்பினோம்.

செல்போன் வைத்திருக்கும் மாணவர்களின் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். தற்போது நேரடி வகுப்புகளே நடக்கின்றன. இந்த நேரத்தில் எதற்காக மாணவர்களிடம் செல்போனை கொடுக்க வேண்டும்? மாணவர்களும் தங்களுக்கு பிரச்சனைகள் வரும் போது பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.