ஏகமனதாக தேர்வானாரா எடப்பாடி பழனிச்சாமி?!

11 May 2021

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் அ.தி.மு.க 65 இடங்களில் வென்றது. இதையடுத்து, `எதிர்கட்சித் தலைவர் யார்?' என்ற கேள்வி அ.தி.மு.க முகாமில் எழுந்தது. இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் யார் எதிர்கட்சித் தலைவர் என்பதில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆதரவு உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


இந்தக் கூட்டத்தில், ` வன்னியர் இடஒதுக்கீடு, தே.மு.தி.கவை வெளியேற்றியது போன்ற காரணங்களால்தான் நாம் தோல்வியை தழுவினோம். இதற்கு நீங்கள்தான் முழுப் பொறுப்பு' என ஓ.பி.எஸ் தரப்பினர் குற்றம் சாட்ட, ` மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ததன் காரணமாகத்தான் இவ்வளவு இடங்களை வெல்ல முடிந்தது. அதனால் எடப்பாடியே எதிர்கட்சித் தலைவராக வர வேண்டும்' என கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதை ஓ.பி.எஸ் தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை. `இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நாங்கள் விட்டுக் கொடுக்க முடியும்?' என எதிர்க்குரல் எழுப்பினர். இந்தக் கூட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் பேசியுள்ளனர்.
கூட்டத்தில் எடப்பாடி தரப்பினர் பேசுகையில், ` கொங்கு மண்டலத்தில் இருந்துதான் அதிகப்படியான எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் செலவுகளையும் நாங்கள்தான் செய்தோம். தமிழ்நாடு முழுக்க எடப்பாடிதானே சுற்றுப்பயணம் செய்தார்' எனக் கூறியுள்ளனர். இதற்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ் தரப்பினர், ` அப்படியானால், இருவருக்கும் பொதுவாக தனபாலை முன்னிறுத்தலாம்' எனக் கூறியுள்ளனர். இதனை எதிர்பார்க்காத தனபால், `நான் இந்த ஆட்டத்துக்கு வரவில்லை. எனக்கு இதற்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறிவிட்டார்.

எம்.எல்.ஏக்களில் பெரும் பகுதியினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தால் ஓ.பி.எஸ்ஸால் எதையும் முன்னெடுக்க முடியவில்லை. இதையடுத்து, எடப்பாடியை தேர்வு செய்ததாகத் தயாரான அறிக்கையில் கையொப்பம் போட்டுவிட்டு கூட்டத்தில் இருந்து முதல் ஆளாக அதிருப்தியுடன் ஓ.பி.எஸ் வெளியேறியுள்ளார். `இது தொடர்பாக வெளியான அறிக்கையிலும், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு மனதாக என்றால் அனைத்து தரப்பினரும் இணைந்து தேர்வு செய்ததாக எடுத்துக் கொள்ளலாம். ஏக மனதாக என்றால் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் எடப்பாடி தரப்பிடம் உள்ளதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

தேனி மாவட்டத்திலேயே இவருடைய ஒரு தொகுதியில் மட்டும்தானே வெல்ல முடிந்தது. வன்னியர் இடஒதுக்கீட்டை எடப்பாடி அளித்ததன் மூலமாக தென்மாவட்டம் தோற்றது என ஓ.பி.எஸ் தரப்பினர் கூறுகின்றனர். அப்படியென்றால், 65 இடங்களில் அ.தி.மு.க வென்றதற்குக் காரணம் எடப்பாடியின் பிரசாரம்தானே. அதனால், எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதே சரியானது" என்கிறாரகள் இபிஎஸ் ஆதரவாளர்கள். 

கட்சியின் நலனுக்காக ஓ.பி.எஸ் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறார். அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்த பிறகு கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளையும் எடப்பாடி தரப்பினர் நிறைவேற்றவில்லை. ஆட்சி அதிகாரத்திலும் ஓ.பி.எஸ்ஸுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஓ.பி.எஸ் அறிவித்தார். இருவருமே இணைந்துதான் வேட்பாளர்களை அறிவித்தார்கள்.சொல்லப் போனால், தென் மாவட்டத்தில் எடப்பாடி ஆதரவாளர்கள் சிலர் வெற்றி பெற்றனர். ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சிலர் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டனர். உதாரணமாக, மதுரையில் வென்ற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பலரும் எடப்பாடியின் ஆதரவாளர்கள்தான். `தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஓ.பி.எஸ் கை ஓங்கிவிடக் கூடாது' என்பதற்காகவே இவ்வாறு செய்தனர். வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த பி படிவத்தில் ஓ.பி.எஸ் மட்டும் கையொப்பம் போடாமல் இருந்திருந்தால் பெரிய சிக்கல் வந்திருக்கும். `இந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும்' என்பதற்காகத்தான் ஓ.பி.எஸ் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறார். இந்தமுறையும் அதையேதான் செய்தார்" என்கின்றனர் ஒபிஎஸ் தரப்பினர்.

தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அதிமுக நிர்வாகிகள் அளித்துள்ளனர். இதன் மூலம் கடந்த 2 நாள்களாக இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் இடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.