மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து திருவாரூர் அருகே எடியூரப்பா உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்!

20 June 2021


திருவாரூர் அருகே எடியூரப்பா உருவபொம்மையை எரித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

திருவாரூர் அருகே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடப்பாறு ஆற்றங்கரையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உருவ பொம்மையை எரித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராகவும், சட்டத்துக்கு புறம்பாகவும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா காவிரியின் குறுக்கே அணை கட்டுவதாக பேசி வருகிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதிக்க கூடாது என கோரிக்கை வைத்துள்ள நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அணை கட்டியே தீருவேன் எனக் கூறியிருப்பது பிரதமர் மோடியை அவமதிக்கும் செயல் ஆகும். 

இதன் மூலம் எடியூரப்பா அண்டை மாநில உறவையும் இந்தியாவின் ஒற்றுமையையும் சீர்குலைக்கிறார் சட்டத்துக்கு புறம்பாக எடையூரப்பா அணை கட்ட சட்டமன்றத்தில் நிதி ஒதுக்குவதும், அணை கட்டும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் தெரிவிப்பது சட்டவிரோதம். தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அடுத்த வாரம் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என்று கூறிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கோட்டூர் ஒன்றிய செயலாளர் ராவணன், ஒன்றிய தலைவர் வீரசேகர், துணை தலைவர் ரத்தினசாமி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் மீனா திருவாரூர்