ஊரடங்கால் காற்றில் மாசு குறைவதால் பூமியும் நிம்மதியாக மூச்சுவிடுகிறது..

11 June 2021


கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகம் முழுவதும் மனிதர்கள் மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பூமி நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்திருப்பதுதான் காரணம்என்பதை அறிவோம். காற்றில் நைட்ரஜன் ஆக்சைடின் அளவு குறைந்துள்ளது. அபரிமிதமான வாகனப் போக்குவரத்தால் இந்த மாசு உருவாகக்கூடியது. புனேவில் நைட்ரஜன் வாயு மாசுபாட்டின் அளவு 43 சதவீதம், மும்பையில் 38 சதவீதம், அகமதாபாத்தில் 50 சதவீதம் குறைந்துள்ளதை அறிவோம். சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் இந்த காற்று மாசு குறைந்திருப்பதில் உயிரினங்களுடன் சேர்ந்து பூமியும் நிம்மதியாக உள்ளது.

சபர் அமைப்பின் விஞ்ஞானியான கப்ரன் பெய்க், "கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள பெருநகரங்கள் எல்லாம் ஊரடங்கு உத்தரவால் அடைபட்டிருக்கின்றன. தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள், வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதன் எதிரொலியாகவே காற்றின் மாசு குறைந்திருக்கிறது என்கிறார். மாசுபாடு குறைந்து, சுவாசிக்கத் தகுந்த காற்றுத்தரம் எட்டப் பட்டிருப்பதை ஆரோக்கியமான விஷயமாக சூழலியலாளர்கள் கருதுகின்றனர். தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் உயர்ந்திருப்பதையும், கான்பூரில் போதுமான தரத்துடன் இருப்பதையும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிசெய்துள்ளது.

இதுகுறித்து 92 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் காற்றின் தரம் திருப்தியாக இருப்பதாகவும் பதிவாகியுள்ளது. சேப் பார் ஏர்' என்னும் தன்னார்வ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஜோதி பாண்டே லவாகரே, "நவீன நாகரிகத்தின் பெயரால் காற்றில் மாசை இனிமேலும் அதிகரிக்காதீர்கள். இந்த மாற்றத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து, தங்களுடைய செயல்பாடுகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம்" என்கிறார். ஆகவே அனைவரும் கொரோனா ஊரடங்கை கடைபிடிப்பதால் காற்றில் மாசு குறைந்து மக்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் நல்ல ஆரோக்கியம் பெறும் நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பூமியும் மாசு இல்லாமல் நிம்மதியாக மூச்சு விடும்.