~ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு மற்றும் குழந்தை பிறப்பு கோளாறு !!

18 November 2021

~ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு மற்றும் குழந்தை பிறப்பு கோளாறு !! 

சமூக பொதுப்புத்தி என்பது குழந்தை பிறப்பை பொறுத்தவரை பெண்களை மையப்படுத்தி மட்டுமே சுழல்கிறது.

குழந்தை உருவாகவில்லை என்றால் பெண்ணுக்கு PCOD பரிசோதனை, தைராய்டு, ஹார்மோன் பரிசோதனை செய்ய சொல்பவர்கள் ஆணிடம் அந்த மாதிரியான பரிசோதனைகள் செய்ய நிர்பந்தம் செய்வதே இல்லை. 

கரு உருவாகாமல் இருக்க 

40% பெண்ணுக்கு குறைபாடுகள் இருக்கலாம். அதே 40% அளவு குறைபாடுகள் ஆணுக்கு இருக்கலாம். ஆகவே, பெண்ணை மட்டும் குறை சொல்லும் சமூகம் முற்றிலும் மாற வேண்டும். ஆணுக்கு விந்தணு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்தல் அவசியம்.

ஆணுக்கு ஏற்படும் குறைபாடுகள் நிறைய காரணத்தால் இருக்கலாம்.

இதை பற்றி விரிவாக காணலாம்.

நமது மூளைக்கு பக்கத்தில் உள்ள Pituitary என்னும் சுரப்பி GnRh என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது; இந்த GnRh ஆனது FSH மற்றும் LH எனும் இரண்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

*FSH பணி - விந்தணு உற்பத்தி
*LH பணி - Testosterone எனும் ஆண்மைக்கான ஹார்மோன் உற்பத்தி

விந்தணு கோளாறுகள் பலவிதப்படும். அவற்றில் சில

1.Azoospermia - சுத்தமாக விந்தணு இல்லாமல் போவது
2. Oligospermia - விந்தணுவின் அளவுகள் குறைந்து காணப்படுவது
3.Asthenospermia - விந்தணுவின் நகரும் தன்மை குறைந்து காணப்படுவது. (Low Motility)

இவை ஏற்பட 

1.மரபணு/பிறப்பு கோளாறு (இவை அரிதான காரணங்களே)

2.ஏதேனும் உட்கோளாறு

A) Varicocele - Testes என்னும் விரைப்பையை சுற்றியுள்ள ரத்த நாளங்கள் வீங்கியிருத்தல். 40% ஆண்களுக்கு விந்தணு கோளாறு ஏற்பட இதுவே காரணம். இதனை, அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய இயலும்.

B)ஏதேனும் நோய் கிருமி விரைப்பையை தாக்குவது 

C)அதிக சூட்டில் வேலை செய்வது மற்றும் கதிரியக்க தாக்குதல் (Heat & Radiation Exposure)

D) புகை, மது, கஞ்சா உபயோகித்தல். கடந்த 50 வருடங்களில் 15% மட்டுமே இருந்த விந்தணு கோளாறுகள் தற்போது 50% மாற மிக முக்கிய காரணம் இந்த பழக்கங்கள். எனவே, இவற்றை முற்றிலும் கைவிட வேண்டும்.

E)உடல்பருமன்

F) அதிக Stress ஏற்பட்டால் ஹார்மோன்கள் அளவு குறைவாக சுரக்கும். அதனால், விந்தணு உற்பத்தியும் குறையும்.

இப்படி பல்வேறு காரணிகள் இருக்கிறது. இவற்றை கண்டறிவது எப்படி ??

'Semen Analysis' எனும் விந்தணு பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அவற்றில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல் வேண்டும். 

மேலும் சில ஹார்மோன் பரிசோதனைகள் செய்து என்ன காரணம் என்பதை கண்டறிவதும் அவசியம்.

சரி, விந்தணுவின் தன்மை மேம்பட என்ன உட்கொள்ள வேண்டும்.

Zinc எனும் தாதுஉப்பு அதிகமாக உள்ள பாதாம், முட்டை, மீன், கோழி ஆகியவை உட்கொள்ளலாம்.

Vitamin E அதிகம் உள்ள மீன், ஆட்டு ஈரல் பாதாம், கீரை உட்கொள்ளலாம்.

L- Cartinine அதிகம் உள்ள மீன், பால் மாட்டுக்கறி போன்ற சிகப்பு இறைச்சி உட்கொள்ளலாம்.

நான் இங்குள்ள ஆண்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

திருமண பேச்சு உங்களுக்கு நடக்கிறது என்றால், நீங்களாகவே சென்று ஒருமுறை Semen Analysis Test, ஹார்மோன் பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள்; அவற்றில் ஏதேனும் குறை இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்யுங்கள்; தேவையற்ற பழக்கங்களால் உங்களுக்கு விந்தணு கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றை நிறுத்துங்கள். உடல்பருமனை பேலியோ போன்ற டயட் மூலம் சரிசெய்து பின்பு திருமணத்திற்கு தயார் ஆகவும். 

பெண்ணை மட்டும் குறை சொல்லும் முந்தைய சந்ததியை போன்று அல்லாமல், நம்மை நாமே பரிசோதனை செய்து, குறை இருப்பின் அதை தயக்கமின்றி நிவர்த்தி செய்யும் பொறுப்புள்ள சமூகமாய் மாறுவோம்.

நன்றி.❤️

Dr.Aravindha Raj