ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது - காவல் ஆணையர்

10 May 2021

 கொரோனா முழு ஊரடங்கு காலகட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை புகைப்படம் எடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டுமே தவிற வாகனப் பறிமுதலில் காவல்துறையினர் ஈடுபடக்கூடாது என தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.


கொரோனா நோய் தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழக அரசு சார்பில் முழு ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும்போது பின்பற்ற வேண்டிய கடமைகள் குறித்து தமிழக காவல்துறை தலைவர் அறிவுறைகள் வழங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில் நாளை முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ள நிலையில் அனைத்து காவல்துறையினரும் தவறாமல் பாதுகாப்புப் பணியில் காலை 6 மணி முதல் ஈடுபடவேண்டும் எனவும், 50 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள், இணை நோய் உள்ள காவலர்கள் மற்றும் பெண் காவலர்களை வாகனத் தணிக்கை மற்றும் பிக்கெட்டிங் போன்ற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனைகள், மார்க்கெட் போன்ற இடங்களில் கொரோனா நோய் தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக்கொண்ட காவலர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் எனவும், காவலர்களை சுழற்சி முறையில் பணியமர்த்தி ஒவ்வொருவருக்கும் 5 மணி நேர ஷிப்ட் முறையில் பணிகளில் ஈடுபடவைக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், வாகனத் தணிக்கை, பிக்கெட்டிங் போன்ற பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவலர்கள் அனைவரும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிப்பதோடு தங்களது உடல் நலனை காக்கும் வகையில் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதும் அவசியம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை மூலம் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல் துறையினருக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல வாகனத் தணிக்கை மற்றும் பிக்கெட்டிங் பணிகளின் போது காவலர்கள் பொதுமக்களிடம் கோபப்படாமல் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் பிற அரசு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது எனவும் காவல்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தடியடி போன்ற பலப் பிரயோகங்களை தவிர்த்து ஒலிப்பெருக்கி மூலம் மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் அவர்களுக்கு அறிவுறுத்தி நிலமையை சீராக்க வேண்டும் எனவும் ட்ரோன் கேமராக்கள் மூலம் மக்கள் கூட்டம் கூடுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடமும் காவல்துறையினர் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் எனவும், இன்று மாலை 4 மணிக்கு மேல் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களும் தங்கள் பகுதியில் உள்ள வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தி ஊரடங்கு காலகட்டத்தி அவர்களின் முழு ஒத்துழைப்பை உறுதிபடுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல ஊரடங்கு காலத்தில் இறைச்சிக்கடை, மளிகைக்கடை மற்றும் காய்கறிக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூடாததையும், கடைகளின் முன் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தேவையான வட்டங்கள் வரையப்பட்டுள்ளதா என்பதையும் காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் முழு ஊரடங்கு காலகட்டத்தி அத்தியாவிசியப் பொருட்களான பால், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதை காவல்துறையினர் உறுதி செய்தல் வேண்டும் எனவும், அத்தியாவிசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மார்க்கெட் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ஒழுங்கு படுத்தி மார்க்கெட் பகுதிகளுக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் தடையின்றி செல்லவும், தேவைப்படும் நேரத்தி அவற்றை பின் தொடர்ந்து பாதுகாப்பு வாகனம் செல்வதையும் காவல்துறையினர் உறுதிபடுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு காவல் நிலைய எல்லையையும் பகுதிகளாக பிரித்து அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புண்ர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கிராமபுறப்பகுதிகளில் தண்டோரா அடித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வீட்டினுள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் முறையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இன்று மாலை 6 மணிக்குள் டாஸ்மாக் கடைகளின் விற்பனைகள் முடிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படுவதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் எனவும் காவல்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வாகனப் பரிசோதனையின்போது விதிமுறைகளை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டுமே தவிற வாகனப் பறிமுதலில் ஈடுபடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். அப்படி வாகனப் பறிமுதலில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் அவ்வாகனங்களை சில மணி நேரங்களிலேயே திருப்பி ஒப்படைத்துவிட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இ-பாஸ் வைத்து பயண அனுமதியுடன் வாகனங்களை அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அனுமதிக்க வேண்டும் எனவும் சோதனைச் சாவடிகளில் வாகனப் பரிசோதனை மேற்கொள்ளும்போது அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் வைத்தே சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், சோதனையின் போது பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை காவல் நிலையத்தில் வைக்காமல் அருகில் உள்ள காலி மைதானத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு காலகட்டத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க தனிப்பிரிவு காவலர்கள் சிறந்த முறையில் பணியாற்றி நுண்ணறிவுத் தகவல்களை சேகரிப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் ரம்ஜான் பண்டிகைகள் வரவுள்ள நிலையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.