தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் புகார் மனு

28 January 2021

தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் மீதான தமிழ்நாடு காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் குறித்து 

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் புகார் மனு!

1980, 1990-களில் தமிழகமெங்கும் தேவேந்திரகுல வேளாளர்கள், ஆதிதிராவிடர்கள், அருந்ததியர்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் மிகப்பெரிய அளவிற்கு இருந்தன. இதில், தென்மாவட்டங்களில் அடர்த்தியாக வாழும் தேவேந்திரகுல வேளாளர்கள் மீதான தாக்குதல் என்பது மிகமிகக் கொடுமையானது.

1957-ஆம் ஆண்டு செப்டம்பர், 11-ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் அவர்கள் படுகொலை, 1968-ல் கீழவெண்மணியில் 44 பேர் உயிரோடு எரித்துக் கொலை, 1979-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிவகங்கை மாவட்டம் உஞ்சனையில் 5 பேர் படுகொலை, 1982-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் புளியங்குடி – அய்யாபுரம் கலவரம், 1980-ஆம் ஆண்டு தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் கலவரம், 1989-ஆம் ஆண்டு தேனி, போடி மீனாட்சிபுரம் கலவரம் ஆகியவற்றில் நூற்றுக்கும் பேற்பட்டோர் உயிரிழப்பு, 1995-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் கிராமம் காவல்துறையால் சூறையாடப்பட்டது, 1999-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி நெல்லை தாமிரபரணியில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் 17 பேர் உயிரிழப்பு என எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களால்  தேவேந்திரகுல வேளாளர்கள் பெரும் உயிரிழப்புக்கும் உடைமை இழப்புக்கும் ஆளானார்கள். 

அதே காலகட்டங்களில் தமிழகத்தில் 25,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேனீர் கடைகளில் இம் மக்களுக்கு  தனிக்குவளை முறை கடைபிடிக்கப்பட்டு தீண்டாமை  கடைபிடிக்கப்பட்டது. பல கிராமங்களில் பொது வெளிகளில் இந்த மண்ணின் குடிமக்கள் செருப்புப் போட்டுக் கூட நடக்க முடியாத அவலநிலை இருந்தது.

இதுபோன்ற சமூக விலக்கல்களும், சமூகக் கொடுமைகளும் இருந்த காரணத்தினால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் குறிப்பாக தென்மாவட்டங்களில் மக்கள் கொத்துக்கொத்தாக இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்கு மாறினர். சட்டம் - ஒழுங்கும், பொது அமைதியும் சீர்குலைந்தன. 1997-ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி உருவாக்கத்திற்குப் பிறகு பட்டியல் பிரிவிலிருந்த பெரும்பாலான மக்களும் பூர்வீகக் குடி தேவேந்திரகுல வேளாளர்களும் சமூக விழிப்புணர்வு பெற்றனர். புதிய தமிழகம் கட்சியின் பின்னால் அணிதிரண்டு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்களில் அதிகம் கவனம் செலுத்தி, தங்களுக்கு இழைக்கப்படும் சமூகக் கொடுமைகளைப் புதிய தமிழகம் கட்சியின் மூலம் சட்ட ரீதியாக அணுகினர். குரலற்ற மக்களின் குரலாக புதிய தமிழகம் கட்சி உருவான பிறகு,  தென்தமிழகத்தில் மிகப்பெரிய அளவிற்கு சமூக நல்லிணக்கமும், பொது அமைதியும் நிலவி வருகிறது. 

மேலும் தேவேந்திரகுல வேளாளர்கள், தங்களுக்கு சுயமரியாதையே முக்கியம் என்றும், தங்களைப் பட்டியல் பிரிவிலே இருந்து வெளியேற்றுங்கள் என்றும் போராடி வருகிறார்கள். 
எனவே தான், 6 பெயர்களில் அழைக்கப்படக்கூடிய  பள்ளன், குடும்பன்,தேவேந்திர குலத்தான், , பண்ணாடி, வாதியார்,  கடையன்,
 காலாடி மக்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்று ஒற்றைப் பெயரில் அழைத்திடவும், அவர்களைப் பட்டியலிலிருந்து வெளியேற்றிடவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, கடந்த 4 ஆண்டுகளாக மாநாடுகள், பேரணிகள், உண்ணாவிரதங்கள், தேர்தல் புறக்கணிப்புகள் என தொடர் போராட்டங்களை புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்ததன் விளைவாக, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி மதுரையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கை கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தார். 

தமிழ்நாடு அரசு இதுகுறித்து முடிவெடுக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா அவர்களுடைய தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது. 

2019 - நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்ற பின்னர், பெயர் மாற்றத்திற்கு அரசாணையும், பட்டியல் மாற்றத்திற்கு மத்திய அரசுக்குப் பரிந்துரையும் செய்யப்படும் என்று மாநில முதல்வர் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாததால், நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலை தேவேந்திரகுல வேளாளர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தார்கள். 

இம் மக்கள் பெரும் வசதி படைத்தவர்கள் அல்ல; அவர்கள் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளர்களாகவுமே இருக்கக்கிறார்கள். தங்கள் மீதான தாழ்ந்த ஜாதி என்ற முத்திரை போக வேண்டும் என விரும்புகின்றனர்

இதற்கிடையில், டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி, தேவேந்திரகுல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதுடன், அவர்கள் தொடர்ந்து பட்டியல் பிரிவிலே நீடிப்பார்கள் என தமிழக முதலமைச்சர் அறிவித்தது, இம்மக்களுக்கு மத்தியில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருந்தது. 

தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கை வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல, 6 பட்டப்பெயர்களை தேவேந்திரகுல வேளாளர் என்று பொதுப் பெயரிட்டு, அவர்களை SC பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்பது தான். 

மேலும் புதிய தமிழகம் கட்சி இந்த நாட்டினுடைய விளிம்புநிலை மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்பதற்காகப் போராடி வருகிறது.   ஒவ்வொரு தனிநபருக்கும், இயக்கத்திற்கும், கட்சிக்கும் தங்களுடையக் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடமுண்டு. 

* தமிழகக் காவல்துறையும், அரசு நிர்வாகமும் எந்தவிதமான பாகுபாடுகளும் காட்டாமல், நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்திய அரசியல் சாசனத்தின் விதிமுறைகளாகும்.

* கரோனா பெருந்தொற்று முழுமுடக்கம் அமலிலிருந்தபொழுதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மட்டும், அரசுவிழா என்ற பெயரில், மக்களைத் திரட்டி கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். பல அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருந்தன. அ.இ.அ.தி.மு.க.வினுடைய தலைமை அலுவலகத்திலும், வானகரத்திலும் நடைபெற்ற அக்கட்சியின் கூட்டங்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமலுமே நடத்தப்பட்டன. 

* முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களை கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், பல்லாயிரக்கணக்கான மக்களோடு எடப்பாடியில் தொடங்கினார். 

* ஆனால், முறையாக அனுமதி கோரப்பட்ட புதிய தமிழகம் கட்சியின் அக்டோபர் 6, 10,000 கிராம உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், மதுரையில் நடைபெற்ற ஜனவரி 6, பேரணி – ஆர்ப்பாட்டத்திற்கும் காவல்துறையால் கொடுக்கப்பட்ட இன்னல்களும், தொல்லைகளும், இடையூறுகளும் ஜாதிய வன்மம் கொண்டது, பாரபட்சமானது, மனிதநேயமற்றது, ஜனநாயக விரோதமானது, சட்டவிரோதமானது ஆகும். 

* புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு எதிரான இந்த இரு நடவடிக்கைகளும் காவல்துறையின் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

* புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு எதிராக தமிழகக் காவல்துறை நடந்துகொண்ட விதத்தை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இதில் மிகப்பெரிய உள்நோக்கமும் சதியும் இருப்பதாகவேக் கருதுகிறோம். ஏனெனில் இந்த இரண்டு போராட்டங்களுக்கும் காவல்துறையிடத்தில் அனுமதி கோரியபோது, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களுக்கும் மனு அளித்திருந்தோம்; அவருக்கும் இதுகுறித்து அனைத்தும் தெரியும். எனவே சாதாரண, எளிய மக்களான தேவேந்திரகுல வேளாளர்களுக்கு எதிரான காவல்துறையின் இந்த மனித உரிமை மீறல் குறித்து, இதில் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், தென்மண்டல ஐஜி, மதுரை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அனைவர் மீதும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என  டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்