நெல்லை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று

08 April 2021

நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 2 டாக்டர்கள் உள்பட 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 816 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றும் 14 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 444 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 217 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் பேட்டை, செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.