கொரோனா மருத்துவமனை தீ விபத்து; 5 மருத்துவர்களை கைது செய்து விசாரணை

30 November 2020

குஜராத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு என தனி பிரிவு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்த மருத்துவமனையில் கடந்த 26ந்தேதி இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.


இதில் நோயாளிகள் உள்பட 5 பேர் சிக்கி பலியாகி உள்ளனர்.  பலர் காயமடைந்தனர்.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.  இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி மாநில முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டு உள்ளார்.

தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார்.  இதுபற்றி துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்திய ராஜ்கோட் போலீசார் 5 மருத்துவர்களை வழக்கில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக 5 மருத்துவர்களுக்கும் நாளை கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  அதன் முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்த பின்னர் 5 மருத்துவர்களும் கைது செய்யப்படுவார்கள்.  அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.