கோவை மாவட்டம்: அரசு மருத்துவமனைகளில் மீண்டும் அறுவை சிகிச்சைகள் தொடக்கம்

12 October 2021

கோவை மாவட்டம்: அரசு மருத்துவமனைகளில் மீண்டும் அறுவை சிகிச்சைகள் தொடக்கம்


கோவை அரசு மருத்துவமனைகளில் கரோனா நோய் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அறுவை சிகிச்சைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில் 13 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இதில் பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மகப்பேறு அறுவை சிகிச்சை,எலும்பு முறிவு, விபத்து அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.கரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக கரோனா நோயாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொள்ளாச்சி,மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்பொழுது கரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் அறுவை சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெிவித்துள்ளனர்.

இது குறித்து சுகாதார துறை இணை இயக்குநர் சந்திரா கூறியதாவது: கரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் மருத்துவர்கள், செவிலியர் உள்பட அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. முக்கிய அறுவை சிகிச்சைகள் மட்டும் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில்,கோவையில் தற்போது நோய் தொற்று பரவல் குறைந்து உள்ள நிலையில் பொள்ளாச்சி,மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி