விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்..

23 July 2021


தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, தேனி மாவட்டத்திற்கு கூட்டுறவு கடன் வழங்குவதற்கு ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதாக தெரிவித்தார்.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழகத்தில் முதல் முறையாக கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை பதிவாளர் சண்முகசுந்தரம் எம்எல்ஏக்கள் சரவணகுமார், ராமகிருஷ்ணன் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் வருமாறு.

விவசாயி சீனிராஜ் கூறும்போது,
விவசாயிகளுக்கு பழைய அரசானையின் படியே பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ள காரணத்தினால் கடன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார். தரிசாக உள்ள நிலங்களை மேம்படுத்த அரசு கடன் உதவி வழங்க வேண்டும். 

தொடர்ந்து காமயகவுண்டன்பட்டி செல்லையா கூறுகையில்
தற்போது பயிர்க்கடனாக அதிகபட்சமாக வழங்கப்படுகின்ற ரூபாய் 3 லட்சத்தை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.

அல்லி நகரத்தைச் சேர்ந்த ராஜகுரு பாண்டியன் பேசுகையில்
வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் வகையில் அரசே மகசூலை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விவசாய சங்கத் தலைவர் கண்ணன் பேசுகையில் ஓடைப்பட்டி பகுதியில் விவசாயம் செய்து வருகின்ற திராட்சை விவசாயிகளுக்கு உரம் தேவைப்படுகிறது. அதனை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் புதிய உறுப்பினர்களுக்கு கடன்களை வழங்க வேண்டும் கேரளாவில் தென்னை உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்வது போல தமிழகத்திலும் கூட்டுறவு துறை மூலகமாக விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

தேனி மாவட்டத்தின் ஊராட்சி மன்ற தலைவர் களின் கூட்டமைப்பு தலைவர் ஆரோக்கியசாமி பேசுகையில்
தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை இதனை சரி செய்வதற்கு கூட்டுறவுத்துறையில் நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்து‌. இதனை ஆலைகள் மூலம் எண்ணையாக உற்பத்தி செய்து இதனை நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். இதனை இந்த அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
வடபுது பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விவசாயி வெங்கடபதி பேசுகையில், கூட்டுறவு சங்கங்களின் காலிப்பணியிடங்கள் அதிகம் உள்ளன இவற்றை நிரப்பு வதன் மூலம் அரசு திட்டங்களை எளிதில் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க முடியும். பிரதமரின் மருந்தகங்கள் கிராமங்களில் உள்ளது இவற்றில் 20 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து விற்பனை செய்யப்படுகிறது வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொள்வோர் மருந்தகங்கள் மிகப்பெரும் பயன்பாட்டிற்கு உடையதாக இருக்கிறது எனவே இதுபோன்று கூட்டுறவுத்துறை மூலமும் அனைத்து பகுதிகளிலும் தள்ளுபடி விலையில் மருந்துகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் கூட்டுறவு வங்கிகளில் செயல்படும் வங்கிகளை பிற வணிக வங்கிகள் இணைத்து கோர் வங்கியாக (இணைப்பு) செயல்படுத்த வேண்டும். மேலும் விவசாயிகள் கடன் பெறுவதற்கு அடங்கல் மற்றும் சிட்டா தேவைக்காக அலைய வேண்டி உள்ளது.
இதனை எளிமைப்படுத்தும் வகையில் இப்பதிவு மூலம் இ-அடங்கல் கூட்டுறவுத்துறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் விவசாயிகளின் கோரிக்கை கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், 
தரிசாக கிடக்கின்ற விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்கு கடந்த கலைஞர் ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக நீண்டகால கடனை விவசாயிகளுக்கு தரவில்லை.

தற்போது மீண்டும் தரிசு நிலங்களை மேம்படுத்துவதற்காக ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு அதிகபட்சம் 11000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ரூபாய் 2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தேனி மாவட்டத்திற்கு மட்டும் 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 65 லட்சம் விவசாயிகளில் 16 லட்சம் விவசாயிகள் மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகளையும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் மஞ்சளுக்கு விலை கிடைக்காத காரணத்தால் கூட்டுறவு துறை மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதேபோல தேனி மாவட்டத்தில் தென்னை கொள்முதல் செய்வதற்கு ஆய்வு செய்யப்படும்.

கூட்டத்தில் கூட்டுறவு பதிவாளர் கூறுகையில், 

தமிழகத்தில் 303 கூட்டுறவு மருந்துக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் 20 சதவீதம் வரை மருந்துகள் தள்ளுபடி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.‌ கடைகளை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி களில் மிக விரைவில் கூட்டுறவு சங்க மருந்துகளில் அமைக்கப்பட உள்ளன என்றார்.