குடியுரிமை திருத்த சட்டம் எந்த ஒரு மத சமூகத்தினருக்கும் எதிரானது இல்லை - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

25 October 2020

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் இன்று தசரா விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். 


ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெறும் தசரா விழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள். ஆனால் இந்த ஆணடு கொரோனா பரவல் காரணமாக, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விழா நடத்தப்பட்டது. 50 நபர்களுக்கு மட்டுமே சமூக இடைவெளியுடன் விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. 


இந்த விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், " குடியுரிமை திருத்த சட்டம் எந்த ஒரு மத சமூகத்தினருக்கும் எதிரானது இல்லை. எனினும், சில போராட்டங்கள் இதற்கு எதிராக நடைபெற்றன. முஸ்லீம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு நமது இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். போராட்டங்களை மீண்டும் தூண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 


இந்திய நிலப் பரப்பை ஆக்கிரமிக்க சீனா எவ்வாறு நடந்து கொண்டது என்பதை ஒட்டு மொத்த உலகமும் பார்த்தது. தைவான், வியட்நாம், அமெரிக்கா ஜப்பான் என பல நாடுகளுடன் சீனா மோதி வருகிறது. இந்தியாவின் பதிலடி நடவடிக்கை சீனாவை பதற்றம் அடையச்செய்துள்ளது.

சீனாவின் தாக்குதல்களுக்கு எதிராக நமது படை வீரர்களும் குடிமக்களும் ஸ்திரமாக நின்றனர். இந்தியாவின் தீரத்தையும் உறுதிப்பாட்டையும் சீனாவுக்கு நமது வீரர்கள் காட்டினர். சீனா எவ்வாறு நடந்து கொள்ளும் என நமக்கு தெரியாது. எனவே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.