மோடியின் தவறான கொள்கைகளே காரணம் - பா. சிதம்பரம் விமர்சனம்!

06 June 2021

23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கைகளே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா பெருந்தொற்றின் பொருளாதார விளைவுகளை, மத்திய அரசு கையாண்ட விதத்தை நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தப் பெருந்தொற்று, கீழ் அடுக்கு நடுத்தர மக்களை எப்படிப் பாதித்திருக்கிறது என்ற ஆய்வை வல்லுநரின் துணையுடன் நடத்தினேன் எனவும், அதில் ஆயிரத்து 4 நபர்கள் கலந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதில், கடந்த 14 மாதங்களில் தங்கள் மாத வருமானம் குறைந்திருப்பதாக 880 நபர்கள் பதிலளித்தார்கள் என கூறியுள்ள ப. சிதம்பரம், 758 நபர்கள் தங்கள் குடும்பச் செலவு கூடியிருப்பதை பதிவு செய்தனர் என தெரிவித்துள்ளார். மேலும், 725 நபர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து பணம் எடுத்திருக்கிறார்கள் எனவும், 329 நபர்கள் தங்கள் உடமைகளை விற்றனர் அல்லது அடமானம் வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

702 நபர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள் என கூறியுள்ள ப. சிதம்பரம், இந்த கீழ் நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கும் இவர்களை விட வறுமையில் உள்ள எழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ள ப. சிதம்பரம், 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் இயலாமையும், தவறான கொள்கைகளுமே காரணம் என்ற குற்றச்சாட்டு நியாயம் தானே? என்று பதிவிட்டுள்ளார்.