தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

08 April 2021

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த வாரத்தில் வெயில் 105 டிகிரியை தொட்டும், அதனை தாண்டியும் பதிவாகி வந்தது.

அதன்பின்னர், கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் சில இடங்களில் சற்று குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. அதற்கேற்றாற்போல், தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, குமரிக்கடல் பகுதியில் உருவாக உள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக, 9-ந்தேதி (நாளை) முதல் 11-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 3 டிகிரி முதல் 4 டிகிரி வரை உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.