தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு

10 October 2021

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஞாயிறன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . மேலும், திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 சனிக்கிழமை காலை எட்டரை மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், கரூர், பெரம்பலூர் மாவட்டம் சீகூர் மற்றும் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தெற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல், மத்திய அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

 அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. பேருந்து நிலையம், ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திடீரென பெய்த மழையால் பொன்னேரி சுற்று வட்டாரங்களில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டை, கொல்லம், கோட்டயம் உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.