தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

14 April 2021

தமிழகத்தில் பரவலாக இன்று முதல் காற்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

தென் கேரளம் முதல் தெற்கு கொங்கள் வரை (0.9 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

14.04.2021: தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள்  எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இன்று தமிழ்ப் புத்தாண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது.

கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில்,  

சென்னையில் வடபழனி, வளசரவாக்கம், கோயம்பேடு, போரூர், கொளத்தூர், பெரம்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், கே.கே. நகர், மதுரவாயல், கோடம்பாக்கம், உள்ளிட்ட இடங்களிலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, குன்றத்தூர், மணலி, புத்தாகரம், அனகாபுத்தூர், திருவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

அம்பத்தூர், கொரட்டூர், பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர் கிழக்கு, வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. திடீரெனப் பெய்த மழையால் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களும், வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்தபடி செல்வதைக் காண முடிந்தது.