சிலம்பம் கலைக்கு மத்திய அரசு அங்கீகாரம்: அகில இந்திய சிலம்ப சம்மேளன நிறுவனர் செல்வராஜ்.

16 April 2021

தமிழர்களின் பழமையான தற்காப்பு கலையான சிலம்பத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளதாக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அகில இந்திய சிலம்ப சம்மேளன நிறுவனர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் சிலம்ப வீரர்களின் பல வருட கனவு தற்போது நிறைவேறி உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தற்காப்பு கலையில் மிக பழமையானதாக சிலம்பம் கருதப்படுகிறது. இந்த விளையாட்டுக்கு உரிய அங்கீகாரம் இல்லாததால், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் சிலம்பத்தை சேர்க்க முடியவில்லை எனவும், தனியார் அமைப்பு சார்பில் ஆசிய அளவில் நடைபெறும் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் தகுதி வாய்ந்த வீரர்கள் பலர், மத்திய அரசு நடத்தும் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் மன உளைச்சலில் இருப்பதாகவும் பயிற்சியாளர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 11ம் தேதி ராஜபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அகில இந்திய சிலம்ப சம்மேளனதிற்கு மத்திய அரசின் இந்திய விளையாட்டு அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சம்மேளன நிறுவனர் செல்வராஜ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சம்மேளன தலைவராக சிவசங்கரன், பொதுச்செயலாளராக ஐரின் செல்வராஜ், பொருளாளராக முத்துகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளதால் சிலம்ப விளையாட்டு பார்ம் 2 என்ற சான்றிதழ் பெறும் தகுதியைப் பெற்றுள்ளது.  

இதனால் மற்ற விளையாட்டுகளை போல் சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு இந்திய அளவில் மேல் படிப்பிலும், வேலையிலும் இட ஒதுக்கீடு கிடைக்கும். அரசு வேலைவாய்ப்பில் சிலம்ப ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள வெளிமாநிலங்களுக்கு செல்லும் வீரர்களுக்கு போக்குவரத்து கட்டண சலுகை உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் இந்த அங்கீகாரம் மூலம் கிடைக்கப்பெறும். மேலும் சிலம்ப விளையாட்டை கேலோ இந்தியா யூத் கேம் மற்றும் கேலோ யுனிவர்சிட்டி விளையாட்டுகளில் இணைக்க விரைவில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.