சி.பி.எஸ்‌.இ மாணவர்களின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம்? முழுவிபரம் !

13 April 2021

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகை வரும் மே மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே மே 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கொரோனா மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனை அடுத்து மே 15 ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு மே 21 ஆம் தேதிக்கு மே 13 ஆம் தேதி நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் தேர்வு ஜூன் 8 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மே மாதம் நடக்க இருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வை கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்க பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றானது சுனாமி வேகத்தில் பரவி வருவதால், சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வலியுறுத்தி இருந்தார்.

இதனிடையே சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10ம்வகுப்புக்கான பொதுத்தேர்வினை ரத்து செய்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் 12ம் வகுப்புக்கான பொது தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.