இந்திய விமான சேவைக்கு தடையை நீட்டித்தது கனடா

20 July 2021


இந்தியாவுக்கான விமான சேவையை ஆகஸ்ட் 21ம் தேதி வரை ரத்து செய்வதாக கனடா அறிவித்துள்ளது.


கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால் இந்திய விமான சேவைக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தன. அதன்படி, கடந்த ஏப்ரல் 22ம் தேதி இந்தியாவிற்கான விமான சேவைக்கு தடை விதித்து கனட அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு 3 முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூலை 21ம் தேதியுடன் தடை முடிவுக்கு வரும் நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு தடை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கனடாவில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் அங்கு பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தியாவில் கொரோனா பரவலைக் கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வேறு நாடுகளின் வழியாக, கனடா வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், கனட அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை, பயணம் மேற்கொள்வதற்கு 14 நாட்களுக்காக செலுத்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.