முதல்வரிடம் தொழிலதிபர்கள் புகார் - தமிழக அரசு எச்சரிக்கை

28 May 2022

வரி செலுத்துவோரை தொல்லை செய்யும் வணிகவரித்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 19ஆம் தேதி கோயம்புத்தூரில் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் நடைபெற்றது . அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர், "சிறு,குறு,தொழில் துறையை கவனித்து கொண்டிருக்கக்கூடிய அமைச்சர் அன்பரசன் அடிக்கடி இங்கு வருவார்கள்.


 தேவைப்படுகிற போது நானும் வருவேன் .அவசியம் வருவேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. உங்களுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் என்னோடு நீங்கள் தொடர்பு கொள்ளலாம். இந்த துறையின் அதிகாரிகள் இடத்திலும் நீங்கள் தொடர்பு கொண்டு பேசலாம். எப்போது வேண்டுமானாலும் எங்களை சந்திக்க நீங்கள் வரலாம். அது எந்த நிலையிலும்; நாங்கள் நிச்சயமாக மாறுபட மாட்டோம். நீங்கள் எடுத்துச் சொன்ன அனைத்து கருத்துக்களையும் படிப்படியாக , ஆனால் அதே நேரத்தில் உறுதியாக நிறைவேற்ற நாங்கள் காத்திருக்கிறோம். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்தால் கணக்குகளை எல்லாம் வணிகவரித்துறை கேட்பதாக ஒரு நபர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதுகுறித்து வணிகவரித்துறை அமைச்சரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




இந்நிலையில் வரி செலுத்துவோர் இடம் கடுமையாக நடந்து கொள்ளும் தொல்லை செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது. முதல்வரிடம் தொழிலதிபர்கள் புகார் தெரிவித்த 10 நாட்களுக்குள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.