காளையார்கோவிலில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த போலீஸார் தடுத்ததால் பாஜக மறியல்

28 October 2020

காளையார்கோவிலில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பாஜக மாநிலத் தலைவர் தனது கட்சியினருடன் 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நேற்று செல்ல முயன்றார். இதையடுத்து, மதுரை விரகனூரில் போலீஸார் அவர்களைத் தடுத்ததால் பாஜகவினர் மறியலுக்கு முயன்றனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் மருதுபாண்டியர் நினை விடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் காளையார்கோவில் சென்று மருதுபாண்டியர் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இருப்பினும், கட்சிகளின் தலைவர்கள் 6 வாகனங்களில் மட்டுமே செல்ல போலீஸார் அனுமதித்தனர்.

மேலும் முன்கூட்டியே போலீஸாரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தனது கட்சியி னருடன் 25-க்கும் மேற்பட்ட வாகனங் களில் காளையார்கோவில் நோக்கிச் சென்றார். மதுரை விரகனூர் சுற்றுச் சாலை சந்திப்பில் இருந்து சிலைமான் வழியாக பாஜகவினர் செல்ல முயன் றனர்.

போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி 6 வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்க முடியும் என்றனர். இதனால் அதிருப்தி அடைந்த எல்.முருகன் உட்பட பாஜகவினர், வாகனங்களில் இருந்து இறங்கி சாலையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தல் படி முதலில் சென்ற 6 வாகனங்களை மட்டும் செல்ல போலீஸார் அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும், பாஜக தலைவருடன் சென்ற பிற வாகனங்களும் காளையார்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்