ஐசிஎஃப் ஒருபோதும் தனியார்மயம் ஆகாது வைகோவிடம், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதிமொழி!

24 July 2021


ஐசிஎஃப் ஒருபோதும் தனியார்மயம் ஆகாது வைகோவிடம், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதிமொழி அளித்தார் என அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, இன்று பகல் 12.30 மணி அளவில், தில்லியில் ரயில்வே அமைச்சகக் கட்டடம் ரயில் பவனில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்தனர்.

அமைச்சரிடம் வைகோ முன்வைத்த வேண்டுகோள்:

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களுள் மிகவும் லாபகரமாக இயங்குகின்ற ஒரு நிறுவனம், சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஆகும். அதுவும், அதைச் சார்ந்த உற்பத்தி அலகுகளும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்றன. அதைத் தனியார்மயம் ஆக்கப் போவதாகச் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. இதனால், தொழிலாளர்கள் இடையே அச்சம் நிலவுகின்றது. அதைத் தனியார்மயம் ஆக்கினால், ஆட்குறைப்பு செய்து விடுவார்கள்; ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்க நேரிடும். தொழிலாளர்களின் நலன்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படும்; எனவே, ஐசிஎஃப் நிறுவனத்தை, எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார்மயம் ஆக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், எந்தக் காரணத்தைக் கொண்டும், தனியாரிடம் கொடுக்க மாட்டோம்; என்று உறுதிமொழி அளித்தார். இந்தச் செய்தியை, சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிலாளர்களுக்கு நீங்கள் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார்மயம் ஆவதைத் தடுத்து நிறுத்தியது போல், இன்றைக்கு, ஐசிஎஃப் தனியார் மயம் ஆவதைத் தடுத்த மகிழ்ச்சியை வைகோ வெளிப்படுத்தினார்.