பாமக தலைவரானார் அன்புமணி ராமதாஸ்

28 May 2022

பாமகவின் மாநிலத் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் இன்று நடைபெற்றது.


அதில் பாமக நிறுவனர் ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "அனைத்து மக்களின் கட்சியாக திகழும் பாமக தமிழக அரசியலில் படைத்த சாதனைகள் ஏராளம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் போது, அதை எதிர்த்து முறியடிக்கும் கட்சியகவும், நல்ல திட்டங்களை ஆதரிக்கும் கட்சியாகும் பாமக செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டது. மிகவும் நெருக்கடியான கால கட்டங்களில் கூட பாமக எனும் பெரும் கப்பலை தடுமாறாமல் எடுத்து சென்ற மாலுமி ஜி கே மணி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்றும் அதில் பாராட்டப்பட்டது.


இதனைத் தொடர்ந்து பேசிய ஜி.கே.மணி, "தமிழக அரசியலில் அடுத்த கட்ட மாற்றத்திற்கு முன்னேறி செல்லும் வகையில், பாமக 2.0 உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்று அறிவித்தார். அனைவரும் உற்சாக கரகோஷத்துடன் எழுந்து நின்று அதனை வழிமொழிந்தனர். தலைவராக தேர்வு செய்யப்பட்டதும் அன்புமணி ராமதாஸை அவரது தந்தை ராமதாஸ் கட்டியணைத்து கண்ணீர் மல்க வாழ்த்து தெரிவித்தார்.