பள்ளிகளை திறப்பதில் நிதானம் காட்டுமாறு எய்ம்ஸ்  எய்ம்ஸ் பேராசிரியர் கருத்து-

29 August 2021

கொரோனா இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத சூழலில் பள்ளிகளை திறப்பதில் நிதானம் காட்டுமாறு மத்திய, மாநில அரசுகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் நவீத் விக் கேட்டுக்கொண்டுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பள்ளி மாணவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பேராசிரியர் நவீத் விக், போக்குவரத்து, வகுப்புகளில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் அறைக்குள் இருக்கும் சூழலில் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் என்று குறிப்பிட்ட அவர், அடுத்த 2 மாதங்களில் பண்டிகைக்காலம் வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 56 பேர் பள்ளிகளை விரைவில் திறக்குமாறு பிரதமர் மோடிக்கும் மாநில முதலமைச்சர்களுக்கும் கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா தொற்று பரவலுக்கு பின் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகளை திறக்காத 4-5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அவர்கள் கூறியுள்ளனர். பள்ளிகளால் கொரோனா பரவும் என்ற அச்சம் தேவையற்றது என்றும் சிறாருக்கு தொற்று அபாயம் குறைவு என்பதால் முதலில் ஆரம்பப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.