கோயில் யானைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

24 July 2021


மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கு நடத்தப்பட்டு வந்த புத்துணர்வு முகாம்களுக்கு பதிலாக, இனி யானைகள் பராமரிக்கப்படும் கோயில்களிலேயே நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணியர் கோயில் மற்றும் வன பத்திரகாளியம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு கோயில்களில் திருப்பணி களை மேற்கொள்ள அறங்காவலர்களே பிரச்னையாக உள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

வருவாய் அதிகம் உள்ள கோயில்களின் நிதியை கொண்டு, அதன் உப கோயில் களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

கோயில் யானைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகள், நடைப்பயிற்சி மற்றும் யானைகள் குளிப்பதற்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.