திருவாரூரில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு.

07 June 2021


திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட  ஆதனூர் மண்டபம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நாற்றங்கால் மற்றும் 7 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பசுந்தாள் உரச்சாகுப்படியினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சமயமூர்த்தி, வேளாண்துறை இயக்குநர் தட்சிணமூர்த்தி, திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் உடனிருந்தனர். 

பின்னர்  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தெரிவித்ததாவது...
விவசாயிகளின் நலன் காக்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார் தமிழக முதல்வர் அவர்கள். அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தில் இன்றுவரை 21608 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, 75306 ஏக்கரில் நெல் நடவு மேற்கொள்வதற்கு வசதியாக 2727 ஏக்கரில் நெல் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நெல் நாற்றங்கால் விடும் பணி நடைபெற்றுவருகிறது. மேலும், 218 நெல் நடவு இயந்திரங்கள் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் நெல் நடவு பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடைமடை பகுதிகளுக்கும் பாசன நீர் விரைவில் சென்றடையும் வகையில் வாய்க்கால்கள், ஆறுகள் தூர்வாரும் பணி விரைவாக நடைபெற்றுவருகிறது. அதன்பொருட்டு, பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்தில், கடைமடை பகுதிகளில் நேரடி நெல் விதைப்புப்பணி மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்கான 82,000 ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

கி.இரவி
திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.