மதிய நேரத்தில் நீண்ட நேரம் தூங்குகிறீர்களா? கட்டாயம் இதை தெரிந்துகொள்ள வேண்டும்...

27 August 2020

சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த ஆய்வில் மதியம் நீண்ட மணி நேரம் தூங்குவதால் இதய பாதிப்புகள் உண்டாகுமாம். இதனால் இறப்பைக் கூட சீக்கிரமே சந்திக்க நேரிடும் என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

பகல்நேர தூக்கத்திற்கும் இறப்பு அல்லது இருதய நோய்க்கும் இடையிலான தொடர்பு பற்றிய முந்தைய ஆராய்ச்சி முரண்பட்ட முடிவுகளை உருவாக்கியதைத் தொடர்ந்து. கூடுதலாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அப்போது இரவு நேர தூக்கத்தின் காலத்தை கணக்கிடவில்லை என்பதால் அந்த முரண் ஏற்பட்டுள்ளது. 

ESC Congress 2020 The Digital Experience என்ற கூட்டத்தில் இந்த ஆய்வு சமர்பிக்கப்பட்டுள்ளது. இதில் பகல் தூக்கம் மற்றும் அது தொடர்பான இறப்பு, இதய நோய்கள் குறித்து பேசியுள்ளது. இதில் மொத்தம் 3,13,651 பேர் பங்கேற்றுள்ளனர். அது தவிர 20 ஆய்விதழ் வெளியீடுகளையும் ஆய்வு செய்துள்ளது. இதில் மதியம் நீண்ட நேரம் அதாவது 60 நிமிடங்களுக்கு மேல் தூங்கினால் 30 சதவீதம் சீக்கிரம் இறப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இருப்பதாக கூறியுள்ளது.

34 % இதய பாதிப்புகள் உண்டாகும் என கூறுகிறது. இது தூங்கும் மணிக் கணக்கைப் பொருத்து வேறுபடும் என்கிறது. இதில் இரவு நேர தூக்கத்தை கணக்கிட்டால் இரவு 6 மணி நேரத்திற்கு மேல் தூங்கியும் பகலில் நீண்ட நேரம் தூங்குவோருக்கே இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்கிறது. 

அதாவது மதியம் தூங்காதவர்களைக் காட்டிலும் தூங்குவோரின் இறப்பு சீக்கிரமே வருவதற்கான வாய்ப்புகள் 22 சதவீதம் அதிகம் என்கிறது. எனவே மதிய நேரம் தூங்குவது ஆரோக்கியம் என்கிற ஆய்வுகளையும் காணும் போது அதில் குறைந்தது 30 நிமிடங்களுக்குள் தூங்கி எழும் குட்டித் தூக்கமே ஆரோக்கியம் என்கிறது. மணிக் கணக்கில் தூங்கினால்தான் ஆபத்து. 

அதேபோல் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இவ்வாறு மதியம் நீண்ட நேரம் தூங்குவதால் ஆபத்து அதிகம் என்கிறது.