அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை: உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது - ஜெயக்குமார்

18 June 2022

ஒற்றைத்தலைமை வேண்டும் என்பது கட்சியினருடைய பெரும்பாலானோர் கருத்து அதனை கட்சித் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என ஜெயக்குமார் கூறினார்.

சென்னை அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வாய் வார்த்தையில் தொடங்கிய இந்த சம்பவம் தற்போது கைகலப்பு வரை சென்றுவிட்டது. இந்த ஒற்றைத் தலைமை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதால் தான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம் என ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி உள்ளே பேசியதை வெளியே செய்தியாளர்களுக்கு சொல்லிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் அ.தி.மு.க. பொதுக் கூட்ட தீர்மானத்தை இறுதி செய்ய தலைமை குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த ஜெயக்குமாரை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த நிலையில் தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து வெளியே வரவிடாமல் முற்றுகையிட்டு தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று 3 ஆம் கட்டமாக ஆலோசனை செய்தோம். அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை கோரிக்கை உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்களின் உணர்வைத்தான் பிரதிபலித்தேன். ஒற்றை தலைமை விவகாரத்தில் நான் ஒன்றும் சிதம்பர ரகசியத்தை உடைக்கவில்லை. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்டதை தான் நான் வெளியே தெரிவித்தேன்" என கூறினார்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தீர்மான குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில் சென்னை, கிரீன்வேஸ் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி உடன் ஜெயக்குமார், சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.