28ம் தேதி தமிழகம் முழுவதும் திமுகவை கண்டித்து போராட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு!

23 July 2021


தமிழகத்தில் வரும் 28-ம் தேதி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும். நீட் உள்ளிட்ட விவகாரங்களில் மெத்தனமாக செயல்படும் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்ப வேண்டும் என அதிமுக தெண்டர்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளனர்.


ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிய திமுக அரசு அதை செய்யவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் மாநில அரசு விலை குறைத்திடும் என்று அரசு உறுதி அளித்திருந்தது அதை நிறைவேற்றவில்லை. கட்டுமான பொருட்களின் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று அறிவித்தார்கள் அதை செய்யவில்லை. தமிழகம் முழுவதும் சரியாக நெல் கொள்முதல் செய்யாமல் நெல் மழையில் நனைந்து நாசமாகி கொண்டிருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. காவேரி நதிநீர் விவகாரத்தில் திமுக அரசு சரியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும், அதிமுக மீது பொய் வழக்குகளை போட்டு அதிமுகவை அழித்துவிடலாம் என்ற கனவு பகல் கனவாகவே போகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் திராவிட முன்னேற்றக் கழகம் கூறிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை அதிமுக அறிவித்துள்ளது. காலை 10 மணி அளவில் அனைவரும் வீட்டின் முன்பு பதாகைகளை ஏந்தி திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து இருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.