அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை

16 September 2022

பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023 -ம் நடப்பு கல்வி ஆண்டிற்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு கூடுதலாக 20 சதவீத இங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதை நிரப்புவதற்காக விண்ணப்ப படிவங்களை அரசு விதிமுறைகளை பின்பற்றி நேரடியாக வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, பி. ஏ. ஆங்கிலம், பி. எஸ். சி. கணிதம், பி. பி. ஏ. , பி. காம். சி. ஏ. , பி. காம். பி. ஏ. பாடப்பிரிவுகளில் தற்போது கூடுதலாக வழங்கப்பட்ட இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதில் சேர விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் புதிதாக விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் இருந்து நேரடியாக பெற்று கொள்ளலாம். அதை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் கல்லூரி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் கல்லூரிக்கு ஏற்கனவே விண்ணப்பித்து பி. ஏ. ஆங்கிலம், பி. எஸ். சி. கணிதம், பி. பி. ஏ. , பி. காம். சி. ஏ. , பி. காம். பி. ஏ. பாடப்பிரிவுகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 20 -ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. மதிப்பெண், இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அன்றைய தினமே கல்வி கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகள் சாதி சான்றிதழின் நகலை சமர்ப்பித்து ரூ. 2 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பிற இன மாணவ- மாணவிகள் ரூ. 50 செலுத்தி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து சமர்பிக்க வேண்டும். காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்கள் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் சான்றிதழ் மற்றும் தலா 3 நகல் சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம்-5, கட்டணம் ரூ. 3500 கொண்டு வர வேண்டும். இந்த தகவலை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜ்குமார் தெரிவித்து உள்ளார்.


G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி