ஜனவரி 9-ந் தேதி சென்னை ஆவின் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானம்

01 December 2022

சென்னை ஆவின் அலுவலகம் முன்பு வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.காத்திருப்பு போராட்டம்தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் கே.முகமது அலி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.சண்முகம், பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பி.பெருமாள், பொருளாளர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ஆவின் அலுவலகம் முன்பு வருகிற 9-ந் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதுகுறித்து சங்க தலைவர் கே.முகமது அலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விற்பனை விலையை குறைத்தது. இதனால் ஆவின் நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இந்த தொகையை ஆவினுக்கு அரசு வழங்க வேண்டும். கால்நடை தீவனங்கள் விலை கடுமையாக உயர்ந்துவிட்டன. எனவே ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.10 உயர்த்த வேண்டும்.ஆவின் நிர்வாகம் ரூ.500 கோடி நஷ்டத்தில் இயங்குவதால், பல கூட்டுறவு சங்கங்களில் 2 முதல் 3 மாதங்களாக கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான பணம் கொடுக்கப்படவில்லை. கால்நடை தீவனத்தை மானிய விலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும். கர்நாடகாவில் பால் லிட்டருக்கு 2 ரூபாயும், குஜராத்தில் கூடுதல் தொகையும் ஊக்கத்தொகையாக வழங்குகின்றனர். அதேபோல் தமிழகத்திலும் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் சங்க மாநில நிர்வாகிகள் சங்கர், தீர்த்தகிரி, ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.