முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

25 August 2022

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி அண்ணா திடலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாற்று கட்சியினர் இணையும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் நா.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் வரவேற்று பேசினார்.விழாவில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, அவருடைய மகளும், மாவட்ட கவுன்சிலருமான அபிநயா ஆறுக்குட்டி, தே.மு.தி.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பனப்பட்டி தினகரன், பா.ஜனதா மகளிர் அணி மாநில செயலாளர் மைதிலி உள்பட 50 ஆயிரம் பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:- மாற்று கட்சியில் இருந்து விலகி தாய் கழகமான தி.மு.க.வில் இணைந்த உங்களை வருக, வருக என வரவேற்கிறேன். மாற்று கட்சியில் இருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றோ, மாற்றான் தாய் மக்கள் என்றோ நான் நினைக்கவில்லை. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு நான் உங்களை நினைக்கிறேன். நீங்கள் வருகின்ற இடத்திற்கு தான் வந்து இருக்கிறீர்கள். நான் உங்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சி, எனது மகிழ்ச்சியை பன்மடங்கு உயர்த்தி இருக்கிறது. உங்களை எல்லாம் அழைத்து வந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை மனமார வாழ்த்துகிறேன். அவர் ஒரு செயலில் இறங்குகிறார் என்றால் அது பாராட்டுக்குரியதாக தான் அமையும். எண்ணிக்கையை விட எண்ணம் முக்கியம் என்று நினைப்பவர் அவர். அந்த வகையில் இந்த பொள்ளாச்சியில் இருக்கிற இந்த ஆச்சிப்பட்டி ஆச்சரியப்பட்டியாக எனக்கு காட்சி அளிக்கிறது. 

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் நமது நாட்டின் ஒருமைபாட்டிற்கும் இந்த கொள்கைகள் உள்ளன. 1949-ம் ஆண்டு தி.மு.க. தொடங்கப்பட்டது. 18 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தோம். ஆனால் இப்போது கட்சி தொடங்கியதும் நாங்கள் தான் அடுத்த ஆட்சி என்று சொல்கிறார்கள். கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே நாங்கள் தான் முதல்-அமைச்சர் என்று கூறி வருகின்றனர்.ஆனால் நமது கட்சி 1949-ல் தொடங்கி, 1952-ம் ஆண்டு தேர்தலை சந்தித்தது. அதில் படிப்படியாக வளர்ந்து 1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தோம். இப்போது நாம் 6-வது முறையாக ஆட்சிக்கு வந்து உள்ளோம். இந்த நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். அவை எத்தனையோ தேர்தல்களை சந்தித்து இருக்கலாம். நம்மை போல வெற்றி பெற்ற கட்சி நாட்டில் எதுவும் இல்லை. நம்மை போல தோற்ற கட்சியும் எதுவும் இருக்க முடியாது. இரண்டிலும் நமக்கு தான் பெருமை. நாம் அடையாத புகழும் இல்லை. நாம் படாத அவமானமும் கிடையாது. நாம் செய்யாத சாதனைகளும் இல்லை. அடையாத வேதனைகளும் கிடையாது. இவ்வளவுக்கு பிறகும் இந்த இயக்கம் 70 ஆண்டுகளை கடந்து நிலைத்து நீடித்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் நாம் கொள்கைகாரர்கள் என்பதால் தான். அந்த கொள்கைகளை காப்பாற்ற உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்.சமூக நீதி, சமதர்மம், மனிதநேயம், மொழிபற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி, கூட்டாச்சி தத்துவம் என்பது தான் திராவிடம். ஒட்டுமொத்தத்தில் திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்ல கூடியது. அந்த திராவிட மாடல் ஆட்சி தான் இப்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. கலைஞரின் முழக்கம் சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம். ஆனால் எனது பாணி என்பது சொல்லாததையும் செய்வோம். சொல்லாமலேயே செய்வோம். சட்டமன்ற தேர்தலுக்கு முன் தி.மு.க. சார்பில் மாநில முழுவதற்கும் ஒரு தேர்தல் அறிக்கை, மாவட்டங்களுக்கு என்று தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த தேர்தல் அறிக்கையில் 60 முதல் 70 சதவீதம் வரை வாக்குறுதிகளை செய்து முடித்து உள்ளோம். மற்றவையும் படிப்படியாக உறுதியாக அண்ணா மீது ஆணையாக சொல்கிறேன். அவை கண்டிப்பாக நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இது தான் சொல்லாமல் செய்கிற பாணி. எனவே தான் எதிர்க்கட்சிகளின் அவதூறுகள், பழிச்சொற்களுக்கு எனக்கு பதில் சொல்ல நேரமில்லை. ஆட்சியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக 20 மணி நேரம் உழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி