ஏமாற்றிய தொடக்க வீரர்கள்.. லோம்ரோரின் பொறுப்பான ஆட்டத்தால் பெங்களூரு அணிக்கு 155 ரன்கள் இலக்கு

03 October 2020

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஏமாற்றிய நிலையில் லோம்ரோரின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 154 ரன்கள் எடுத்தது.  

ஐபில் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சுமித் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். விளையாடிய 3 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் பதிவு செய்துள்ளன.

அதனால், மூன்றாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.  முதலில் பேட்டிங் செய்த ராஸ்தான் அணியில் ஸ்மித் 5 ரன்களில் உடானா பந்துவீச்சில் போல்ட் ஆகி நடையை கட்டினார். அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லரும் 12 பந்துகளில் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரி உட்பட 22 ரன்கள் அடித்த நிலையில் சைனி பந்துவீச்சில் படிக்கலிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த சஞ்சு சாம்சனும் 4 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து எளிதாக ஆட்டமிழந்தார்.  

இதனால், ராஜஸ்தான் அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அணியை சரிவில் இருந்து மீட்க வேண்டிய மூத்த வீரர் ராபின் உத்தப்பா வழக்கம்போல் பொறுப்பற்ற முறையில் விளையாடி 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ஆனால், தனது முதல் போட்டியில் விளையாடிய லோம்ரோர் சிறப்பான விளையாடி ரன்களை சேர்த்தார். அவரது ஆட்டம்தான் ராஜஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டது. லோம்ரோர் 39 பந்துகளில் 47 ரன்கள் குவித்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு சற்று நேரம் ஒத்துழைப்பு அளித்த பராக் 16(18) ரன்களில் அவுட் ஆனார். கடைசி நேரத்தில் திவாட்டியாவும், ஆர்ச்சரும் அதிரடி காட்டினர்.

இதனால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. திவாட்டியா 12 பந்துகளில் 24 ரன்களும், ஆர்ச்சர் 10 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணி பந்துவீச்சு மற்றும் பீல்டிங் சிறப்பாக செயல்பட்டது. சாஹல் 3 விக்கெட், உடானா 2 விக்கெட் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே வழங்கினார்.