பெகாஸ் செயலியின் உளவு வலையில் சிக்கிய 14 உலக தலைவர்கள்!

21 July 2021


பெகாசஸ் என்ற கைபேசிகளை உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வேவு பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம....


என்.எஸ்.ஓ என்ற இஸ்ரேலிய மென்பொருள் நிறுவனத்தின் பெகாஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளார்களின் கைபேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வெளியான தகவல்கள், 
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் புயலை கிளப்பியிருக்கிறது.

இந்நிலையில், உலக அளவில் 50,000 கைபேசிகளில் பெகாஸ் ஸ்பைவேர் ஊடுறுவியுள்ளதாக, அம்னெஸ்டி இன்ட்டெர்னேசனல் அமைப்பும், பார்பிடன்ஸ் ஸ்டோரிஸ் நிறுவனமும் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்த பட்டியலில் 14 உலக நாடுகளின் தலைவர்களின் கைபேசி எண்களும் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று அதிபர்கள், 10 பிரதமர்கள் மற்றும் ஒரு மன்னர் இந்த பட்டியலில் உள்ளனர். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஈராக் அதிபர் பர்ஹம் சாலி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், தென் ஆப்பரிக்க அதிபர் சிரில் ரமபோசா ஆகியோரின் கைபேசிகள், பெகாஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால் இந்த தலைவர்கள் யாரும், தம் கைபேசிகளை சோதனை செய்து, பெகாஸ் ஸ்பைவேர் அவற்றில் ஊடுறுவியுள்ளதாக உறுதி செய்யவில்லை. 

பெகாஸ் ஸ்பைவேர் மென்பொருளை, உலக நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும், தனி நபர்கள், தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் இதை உருவாக்கியுள்ள என்.எஸ்.ஓ நிறுவனம் கூறியுள்ளது.