இந்தியாவில் அதிகரிக்கும் காற்று மாசு‌ - முக்கிய காரணிகள் !

05 June 2021

இரு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் மூட்ப்பட்டன. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டனர். மூச்சுத் திணறல் காரணமாக பல நோயாளிகள் மருத்துவமனைகளை நாடினர்.


அதிக காற்று மாசுபாடு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

"விஷவாயுக் கூடமாக" டெல்லி இருப்பதாக பொதுவாக விமர்சிக்கப்பட்டாலும், இந்தியாவில் அதிக மாசுபாடு உள்ள நகரம் டெல்லி மட்டுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே அதிக மாசுபாடு மிக்க ஆறு நகரங்களில் ஐந்து நகரங்கள் டெல்லியில் இருந்து 80 கிலோமீட்டர் சுற்றளவில் காணப்படுகின்றன. குருகிராம், காசியாபாத், ஃபரிதாபாத், பிவாடி மற்றும் நொய்டா நகரங்கள் உலகிலேயே மாசுபாடு மிகுந்த நகரங்கள் பட்டியலில் உள்ளன.

2018ம் ஆண்டு கிரீன்பீஸ் அமைப்பு நடத்திய ஆய்வில், உலகில் அதிக மாசுபாடு மிகுந்த நகரங்களில் 30 இந்தியாவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான அளவு என்று தெரிவித்துள்ளதைவிட மிகவும் அதிகமான அளவில் பி.எம்.2.5 துகள்களை உள்ளடக்கிய மாசுபாடு காற்றில் இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உலகெங்கும் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. டெல்லியை சூழ்ந்துள்ள இத்தகைய புகைமூட்டத்தால் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு, நுரையீரல், புற்றுநோய் ஏற்படும் சதவீதம் அதிகரிக்கும்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் அதனை சுற்றியும் வாழும் சுமார் மூன்று கோடி பேர் ஒரு வாரத்திற்கு மேலாக இந்த புகைமூட்டத்தால் அவதிப்பட்டுள்ளனர். ஆனால், இதனால் உருவாகும் பிரச்சனை டெல்லிக்கு அப்பாற்பட்டதாகும்..

இந்தியாவின் வடபகுதியில், குறிப்பாக கங்கை நதி சமவெளி பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேற்கு நோக்கி வீசுகின்ற காற்று இமயமலை நோக்கி செல்கையில் இந்த தூசியும், புகைமூட்மும் இந்தியாவுக்கு அருகிலுள்ள நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் மாசுபாடு
இந்தியாவில் குறிப்பாக, அக்டோபர், நவம்பர் மாதங்களில் காற்றை மிகவும் மாசுபாடு உடையதாக எது மாற்றுகிறது?

பயிர்களை எரித்தல்
இந்தியாவின் வடபகுதியிலும், டெல்லியிலும் காற்று மாசுபாடு ஏற்பட, அறுவைடைக்கு பின் காய்ந்த பயிர்களை எரிப்பது முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அறுவடை காலத்தில் நிலத்தில் விட்டு செல்லப்படும் காய்ந்த பயிர்களை விவசாயிகள் எரிக்கின்றனர். தங்கள் நிலத்தை அடுத்து பயிரிட தயார் செய்வதற்கு அவர்களுக்கு இருக்கின்ற மிகவும் எளிதான முறை இதுதான்.

மேற்கு நோக்கி வீசுகின்ற காற்று இந்த புகையை டெல்லியை நோக்கி வர செய்வதால், ஒவ்வோர் ஆண்டும் மோசமான மாசுபாடு ஏற்படுவதை காணலாம்.

இணக்கமான முயற்சிகளும், சாத்தியப்படும் மாற்று நடவடிக்கைகளும் வெற்றியடையாததால், இதனை ஒழுங்கு படுத்த அரசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இந்தியா விவசாய பொருளாதாரமாக இருக்கும் நாடாகும். காய்ந்த பயிர்களை எரித்தல் மிக பெரிய அளவில் நடைபெறுகிறது.

குறிப்பாக, உத்தர பிரதேசத்திலும், ஹரியாணாவிலும் காய்ந்த பயிர்கள் அதிகமாக எரிக்கப்படுவதால்தான், டெல்லிக்கு அருகில் அதிக மாசுபாடு மிக்கவையாக நகரங்கள் உள்ளன.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் காய்ந்த பயிர்களை எரிப்பதற்கு தடை விதித்த நிலையில், காற்று மாசுபாட்டை தவிர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அதிகாரிகளை இந்திய உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.

மோசமான புகைமூட்டத்தால், பொது சுகாதார அவசர நிலையை இந்திய அரசு அறிவித்ததோடு, வாகன கரும்புகை வெளியேற்றத்தை தடுப்பது முதன்மை பணியாக மாறியது.

ஒவ்வொரு நாளும் 30 லட்சம் வாகனங்கள் சாலைகளில் செல்வதாக தெரிவித்துள்ள டெல்லி அரசு, நகர சாலைகளில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் முறையை அறிவித்துள்ளது.

தனியார் கார்களை பொறுத்தவரையில், இரட்டை எண்கள் கொண்ட வாகனங்கள் ஒரு நாளும், ஒற்றை எண்களை கொண்ட வாகனங்கள் அடுத்த நாளும் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதனால், 15 லட்சம் வாகனங்கள் சாலையில் செல்வது குறைந்துள்ளது என்று அரசு தெரிவிக்கிறது.

வாகனங்கள் பற்றிய வேறு சில புள்ளிவிவரங்கள்
2016ம் ஆண்டு இந்திய சாலைகளில் 20 கோடிக்கும் மேலான வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை உயர்ந்திருக்க வேண்டும். காய்ந்த பயிர்களை எரிப்பதுபோல, வாகனங்களின் கரியமில வாயு வெளியேற்றமும் இத்தகை மாசுபாடு ஏற்பட முக்கிய காரணியாக இருக்கும்.

டீசலால் இயக்கப்படும் வாகனங்களின் கரியமில வாயு வெளியேற்றம் நாட்டிற்கு பெரிய பிரச்சனையாகவே உள்ளது.

மின்சாரத்தால் இயங்குகின்ற வாகனங்களை அதிகரிக்க அரசு எடுக்கின்ற நடவடிக்கைகள் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. டீசலால் இயங்கும் வாகனங்கள், பெட்ரோல் மற்றும் எரிவாயுவால் இயங்கும் வாகனங்களைவிட அதிக எண்ணிக்கையில் இன்றும் உள்ளன.

2015ம் ஆண்டு டீசலால் இயங்குகின்ற பதிவு செய்யப்பட்ட சரக்கு வாகனங்கள், பேருந்துகள் போன்ற கனரக வாகனங்கள் ஒரு கோடியே ஒன்பது லட்சம் உள்ளன என்று இந்திய அரசு பதிவு செய்துள்ளது. டீசலால் இயங்குகின்ற வாடகை கார்கள் மற்றும் தனியார் கார்களும் உள்ளன.

உலக அளவில் மனிதர்களால் வெளியேற்றப்படும் மாசுபாட்டில் சாலையில் ஓடும் டீசல் வாகனங்களால், சுமார் 20 சதவீத நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது என்று நேச்சர் என்கிற அறிவியல் சஞ்சிகையில் வெளிவந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நைட்ரஜன் ஆக்ஸைடுதான் பி.எம் 2.5 துகள்கள் உருவாக முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

டெல்லியை புகைமூட்டம் சூழும்போது, டெல்லியிலும், அதனை சுற்றியுள்ள பகுதியிலும் கட்டுமானத்திற்கு முழு தடையை அரசும், உச்ச நீதிமன்றமும் விதிக்கிறது.

கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், அரசு கட்டடங்கள், சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் மேம்பால பணிகள் அனைத்தும் இதனால் தடைபடுகின்றன.

இத்தகைய பணியிடங்களில் இருந்து தூசிகள் மற்றும் இடிபாடுகளை செயல்திறன் மிக்கதாய் கையாளுவதில் ஒத்துழைப்பு பல கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து கிடைக்காததால் இது பெரும் பிரச்சனையாகியுள்ளது.

இயற்கையாகவே ரசாயனமாக இருக்கும் இந்த தூசியை காற்று அடித்து செல்வதால், மூச்சுத்திணறலையும், நுரையீரல் தொடர்பான நோய்களையும் உருவாக்குகிறது.

விரைவாக வளர்ந்து வரும் இந்தியா, சீனாவோடு போட்டியிட முயற்சிக்கிறது. கட்டுமானங்கள் வளர்ச்சிக்கான வழியின் ஒரு முக்கியப் பகுதியாக உள்ளன.

2022ம் ஆண்டுக்குள் கட்டுமான துறையின் மதிப்பு 738.5 பில்லியன் டாலராக இருக்கும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. இரும்பு, பெயிண்ட் மற்றும் கண்ணாடி தொழிற்துறையில் இந்தியா முக்கிய பங்களிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்தியா முழுவதும் எவ்வளவு கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன என்று தெளிவான மதிப்பீடுகள் இல்லை.

ஆனால், பெரும்பாலான சிறிய நகரங்களில் குடியிருப்புகள், வணிக கட்டடங்கள், உள்கட்டுமான வசதிகள் என எல்லா துறை கட்டுமானங்களும் அதிகரித்து வருகின்றன. இதனாலும், இந்திய நகரங்கள் உலகிலேயே அதிக மாசுபாடு உள்ள நகரங்களாக மாறுகின்றன.