வன்னியர் ஒரு பார்வை

தமிழ்ச் சமூகத்தின்/ குடிகளின் ஆரம்ப கால வரலாற்றை அறிந்து கொள்வதற்கு நமக்கு சங்க இலக்கியமே பெரிதும் துணை நிற்கின்றது. பொதுவாக இலக்கியச் சான்றுகளை  வரலாற்றாய்வாளர்கள் பெரும்பாலும் துணைச் சான்றுகளாகவே கொள்கின்றனர்.  தொல்லியல், மானிடவியல், முதலிய பல்வேறு அறிவியல் துறைகள் கள ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் அதனையே முதன்மைச் சான்றுகளாக ஏற்கின்றனர்.  தொல்லியல் மானுடவியல் ஆய்வின் முடிவுகளை சங்க இலக்கியச் சான்றுகளோடு ஒப்பிட்டு எழுதும்  வரலாற்றெழுதுகை இன்று வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த  பின்புலத்தின் வழியாக  சங்க இலக்கியத்தில்  புலப்படும்  குடிகள்  பற்றி பார்ப்போம். 

#குறும்பர்_பள்ளி_வன்னியர் : 

தற்போது வன்னியர் என்று அழைக்கப்படும் பெருஞ்சாதி சென்ற நூற்றாண்டு வரை "பள்ளி" இனம் என்றே அழைக்கப்பட்டது. 
பள்ளி என்ற வார்த்தைக்கு  பாடசாலை, கோயில், குறும்பர் என்று பொருள் தருகிறது தமிழ் அகராதி .  (சுராவின் தமிழ் அகராதி). இதில் பாடசாலை, கோயில் என்பது இடத்தைக் குறிக்கும் பெயர்கள். குறும்பர் என்பது சங்க காலத்தில் இருந்து ஒரு குடியைக் குறிக்கும் சொல்லாகவே இருந்து வருகிறது. எனவே  பள்ளி இனம் குறும்பர் என்ற இனத்தின் ஒரு பிரிவாகவே   கருதத் தோன்றுகிறது.

குறும்பு என்பது காடும், காடு சார்ந்த முல்லை நிலப் பகுதியைக் குறிக்கும். காட்டரணையும் குறிக்கும். இக்காட்டரணை காத்து வந்தவர்களே 
குறும்பர்களாவர். குறும்பரில் பெரும்பாலோர் முல்லை நிலத்து தலைவராக இருந்தனர். காடும் காடு சார்ந்த பகுதியில் வாழ்வதால் காடவர் என்றும் குறும்பர்கள் அழைக்கப்படுவர். பிற்காலத்தில்  கோப்பெருஞ்சிங்க காடவராயர் என்ற பள்ளி இன சிற்றரசர் ஆண்டது பற்றி வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அண்டர்களும், பொதுவர்களும் ஆகிய முல்லை நிலக்  குடியினரையும்  குறும்பர் என்பர். குறும்பர், அண்டர், பொதுவர் ஆகிய குடிகளே பள்ளி இனமாக பிற்காலத்தில் மாறியிருத்தல் கூடும் என்றே தோன்றுகிறது. 
சங்க கால குறிப்புகளில் திணை சார்ந்த  குடிகளாகவோ, தொழிற் சார்ந்த குடிகளாகவோ எதிலும் "பள்ளி" என்ற சொல் இடம் பெறவில்லை. சற்றேறக்குறைய பத்தாம் நூற்றாண்டளவில்தான்  பள்ளி என்ற சொல் அறியப்படுகிறது என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.  தற்போதை வட மாவட்டங்களையும், வேங்கட மலையை ஒட்டிய
பகுதிகளையுமே குறும்பர்களின் நாடுகளாக சங்க இலக்கியம் காட்டுகிறது. 

#குறும்பர்_நாடு : 

வடக்கே வேங்கடம் முதல் தெற்கே தென் பெண்ணையாறு வரை உள்ள நிலப்பரப்பு குறும்பர் நாடு என்றே சங்க காலத்தில் அழைக்கப்பட்டு வந்தது. இதனில் தென் ஆர்க்காடு, வட ஆர்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களும், தற்போது, ஆந்திரத்திலுள்ள நெல்லூர், சித்துார் மாவட்டங்களின் பகுதிகளும் அடங்கும்.

இந்த நாட்டில் மலைகள் உண்டு. அவை காளத்தி, திருப்பதி, திருத்தணிகை, வேலூர், செங்கற்பட்டு முதலிய இடங்களில் இருக்கின்றன. இந்த நாட்டில் ஒரு காலத்தில் காடுகள் பல இருந்தன. இந்த உண்மையை ஆர்க்காடு, வேற்காடு, ஆலங்காடு, மாங்காடு முதலிய இக்கால ஊர்ப் பெயர்களைக் கொண்டும் உணரலாம்.

இந்த நாட்டில் பொன் முகலி, பாலாறு, தென் பெண்ணை என்னும் ஆறுகள் பாய்கின்றன. எனினும் பெரும்பாலான நிலப் பகுதிக்கு இந்த ஆறுகள் பயன் தருவது இல்லை. அதனால் ஏரிகளே இங்கு மிகுதி. நிலம் மிக்க வளமுடையது அன்று. இங்கு  மலைகளையும் சில காடுகளையும் ஒன்றுமே விளையாத பாலை நிலங்களையும் ஆங்காங்குப் பசிய வயல்களையும் காணலாம்.

இந்த நாட்டை ஆண்டு வந்தவர்களே   குறும்பர் என்பவர்கள்.  இவர்கள் இந்த நாட்டை இருபத்து நான்கு கோட்டங்களாக  பிரித்துக் கொண்டு ஆண்டு வந்தனர்.  ஆ தொண்டை சக்கரவர்த்தி என்பவன் குறும்பர்களை  வென்று இந் நாட்டைக் கைக்கொண்டான் என்று சங்க இலக்கிய குறிப்பு தெரிவிக்கிறது.  அது முதல் இந்த நாடு அவன் பெயரால் தொண்டை நாடு எனப்பட்டது.

ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகட்கு முற்பட்ட சோழ அரசருள் மிகச் சிறந்தவன் கரிகாலன். இவன் பல நாடுகளை வென்றவன். இவன் குறும்பர்களை
வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றிய முதல் சோழன் என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. இவன் தொண்டை நாட்டுக் காடுகளை அழித்து நாடாக்கினான்; வேளாண்மையை வளர்ப்பதற்காக நாற்பத்து எண்ணாயிரம் வேளாளரைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து குடியேற்றினான் என்று சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

அண்டர்  குடியினரைப்பற்றி பதிற்றுப்பத்தில்
வருகின்றது. கழுவுள் என்பவன் இந்த
அண்டரின் தலைவனாகச் சொல்லப்படுகிறான். தமிழகத்தின்
வடவெல்லைக்கு வடக்கே இருந்த காமூர் இவனது தலைநகரமாம்.
தன்மீது படையெடுத்துவந்த பதினான்கு வேளிரையும் இக் கழுவுள் வென்றானாம். (அகநானூறு 135)

ஆநிரையைக் குறிக்கும் 'மாடு' என்னும் செல்வவளம் மிக்க
நாட்டினன் இக் கழுவுள். இவனது படைஞர்கள் ஆநிரை கவர்ந்துவர வேற்றுப் புலங்களின்மீது இடைவிடாது படையெடுத்து வந்தனர், இக் கழுவுள் குடியினரின் ஆநிரை கவர்தலைத் தடுக்க விழைந்த
சேரமான், அவனது காமூரைத் தாக்கி அந் நகரையே பாழாக்கினான்.
பெருஞ்சேரல் இரும்பொறையால் காமூரே பாழாக, அவ் வூரை
விட்டே வேற்றுநாடுகளுக்கு ஓடினர் அண்டர் என்னும் குறும்பர் குடியினர்.

சங்க அக இலக்கியங்களிலும் குறும்பர் - குறும்பர் நாடு பற்றி குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. இதில் குறும்பர்கள் பெரும்பாலும் பாலை நிலக் குடிகளாகவே சுட்டப் பெறுகின்றனர். 

மழை இல்லாது பயிர்கள் பட்டுக் கொளுத்தும் வெயிலில் தீய்ந்து
கொண்டிருந்தன. 'உலகமே அழியும் ஊழிக்காலமோ?” என அஞ்சி,மக்கள் இடம்பெயரத் தொடங்கிய நிலையில் வாழ்க்கையே கொடியதாக இருந்தது. உயிரினங்கள் எல்லாம் கடும் கோடையின் வெப்பத்தால் மடியத் தொடங்கின. கல்லும் முள்ளுமான ஊர்களில் வாழ்ந்து வந்த குறும்பர் நாட்டு வீரர்கள் எய்த அம்புக்கு இரையாகி, அக்கொடிய சுரத்தில் ஆட்கள் மடிந்து கிடப்பர். அவர்களின் உடம்பிலிருந்து கொட்டிய குருதி பார்ப்பதற்குச் சிவந்த அலரிப்பூ மாலையைச் சூடியதைப் போல் தோன்றும். அவ்வாறு செத்துக் கிடப் போரின் கண்களைக் கொத்திச் சென்று, ஓங்கி வளர்ந்த இலையுதிர்ந்த யா மரத்தின் மேலிருந்த தன் குஞ்சுகளுக்குக் கழுகு ஊட்டும். இது போன்ற கொடிய
காட்சிகளைய காடுகளைக் கொண்டதாக அக் குறும்பர் நாடு இருந்தது என்று அகநானூற்று (31) பாடல் தெரிவிக்கிறது. 

துலாக்கோலைப் போல நடுவுநிலையான பேச்சுடையவன்
நன்னன். குறும்பர்களின் காட்டரண்களை அழித்துப் போரில் அவர்களை வென்று தன்னைப் பாடிச் சென்றோர்க்கு எல்லாம் பெரிய அணிமணிகள் முதலான செல்வங்களை எல்லாம் எதையும் பாராது பரிசிலாகக் கொடுத்து வந்தவன் அந் நன்னன். ஏழிற்குன்றமான தன்
எல்லையில் அவ்வப்போது அரட்டிவந்த குறும்பரை அந் நன்னன் அடக்கினான் என மாமூலனார் சொல்கின்றார்.
குறும்பர்களைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம். 

தொடரும்......