பிற்காலப் பாண்டியர்களால் கட்டப்பட்ட கோவில்! திருவாடானை அறிமுகம்!

திருவாடானை அறிமுகம்

இராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் மதுரையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் இராமநாதபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாடானை. இராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என இவ்வூர் அழைக்கப்படுகிறது.




வளமான மண் நிறைந்த மருத நிலமான திருவாடானை பகுதியில் மழை பெய்யும் காலங்களில் அதிக நெல் விளைச்சல் இருக்கும். இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவாக திருவாடானை ஒன்றியத்தில் மட்டும் கோட்டை என முடியும் 28 ஊர்கள்  உள்ளன. இவை நெல் விளையும் கோட்டை என்பதால் இப்பெயர் பெற்றுள்ளன. 

முத்தூற்றுக்கூற்றம் என்னும் நாட்டுப் பகுதியில் இப்பகுதி இருந்துள்ளது. வணிகர் தொடர்பால் இப்பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான  சிவன் கோயில்கள் உள்ளன. இங்கு பாடல்பெற்ற ஆடானை நாயகர் என்ற  ஆதிரத்தினேஸ்வரர் கோயில் உள்ளது.




ஆதிரத்தினேஸ்வரர் கோயில் 

இக்கோவில் இறைவன் ஆடானை நாயகர் என்ற ஆதிரத்தினேஸ்வரர். அம்மன் அன்பாயிரவல்லி என்ற சிநேகவல்லி. கோவில் தலவிருட்சம் வில்வமரம். தீர்த்தம் சூரிய புஷ்கரணி. இக்கோவில் 422 அடி நீளமும் 252 அடி அகலமும் உடையது. இதன் கோபுரம் 150 அடி உயரமுடையது. மதில் சுவர்கள் மிக உயரமானவை. பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோவில்கள் 14 உள்ளன. அவையாவன மதுரை, திருப்புனவாசல், திருப்பத்தூர், திருக்குற்றாலம், திருஆப்பனூர், திருவேடகம், திருநெல்வேலி, இராமேஸ்வரம், திருவாடானை, திருப்பரங்குன்றம், திருச்சுழி, காளையார்கோவில், பிரான்மலை, திருப்பூவனம். இவற்றில் இராமேஸ்வரமும், திருவாடானையும் மட்டுமே இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளன. 

 இவ்வூர் பாரிஜாதவனம், வன்னிவனம், குருக்கத்திவனம், வல்லவனம், முத்திபுரம், ஆதிரத்தேசுவரம், ஆடானை, மார்க்கண்டேயபுரம், அகஸ்தீசுவரம், பதுமபுரம், கோமுத்திசுவரம், விஜயேசுவரம் என 12  பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. திருஞானசம்பந்தர்  ஆடானை நாயகர் மேல் ஒரு பதிகம் பாடியுள்ளார். அருணகிரி நாதர் இக்கோவிலில் உள்ள முருகனைப் போற்றி பாடல் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல்களிலும், கல்வெட்டுக்களிலும்  இவ்வூர், ஆடானை என்றே குறிக்கப்படுகிறது. களப்பிரர், பாண்டியர் ஆட்சிக்காலத்தில் முத்தூற்றுக்கூற்றம்  எனும் நாட்டுப்பகுதியில் இவ்வூர் இருந்துள்ளது. 

விழாக்கள் 

வைகாசி விசாக வசந்தவிழா 10 நாள்கள், ஆடிப்பூரத் திருவிழா 15 நாள்கள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

திருவாடானைப் பகுதியின் வரலாற்றுச் சிறப்புகள் 




கோவில் அமைந்த ஊர் என்பதால் ஆடானை என்ற இவ்வூரின் பெயருடன், திரு என்ற விகுதி சேர்த்து திருஆடானை என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் இருந்த நான்கு கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை (ASI) 1914 ஆம் ஆண்டு படி எடுத்துள்ளது. இதில் இரண்டு பிற்காலப் பாண்டியர் காலத்தையும், இரண்டு சேதுபதிகள் காலத்தையும் சேர்ந்தவை. 

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி.1216 – 1238) 16 ஆம் ஆட்சியாண்டில் கி.பி.1232இல் இக்கோவிலுக்கு நிலக்கொடை வழங்கியதை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. இதில் ‘சோணாடு கொண்டு முடிகொண்டசோழபுரத்தில் வீராபிஷேகம் செய்த சுந்தர பாண்டியத் தேவர்’ என அவர் குறிக்கப்படுகிறார்.

மற்றொன்று பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கோனேரின்மை கொண்டான் எனும் அரசாணைக் கல்வெட்டு. இது இக்கோவிலுக்கு நெல் தானமாக வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. 

சடைக்கத்தேவர் என்ற தளவாய் சேதுபதியின் பிரதிநிதியான திருமலையன் என்பவர், திருவாடானை கோவில் ஆடானை நாயகருக்கு அபிசேகம், திருநீறு, மாலைகள் போன்றவற்றிற்காக ஒவ்வொரு கிராமமும் ஒரு காசும், ஒரு பணமும், ஒரு கலம் நெல்லும் கோவிலுக்குக் கொடுக்க வேண்டும் என  கி.பி.1635 இல் ஆணையிட்டுள்ள கல்வெட்டு இக்கோவில் இராஜகோபுர சுவரில் இருந்துள்ளது. இந்தக் கிராமங்களிலே மேற்கண்ட வரி கொடுக்காமல் இருக்க கைக்கூலி வாங்கியவன் பெண்டாட்டியையும் உடன்பிறந்தாளையும் மகளையும் மருமகளையும் கயவர்களையும் ஒரு வீட்டில் பகைவருடன் கூட்டிக்கொடுத்த பாவத்தை அடைவான் எனக் கடுமையாகக் கூறுகிறது. கையூட்டு, இலஞ்சம் என்ற பொருளில் கைக்கூலி எனும் சொல் இக்கல்வெட்டில் கையாளப்பட்டுள்ளது.

கிழவன் சேதுபதிக்குப் பின் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே மன்னராய் இருந்த முத்து வைரவநாத சேதுபதியின் ஆணையின்படி, இக்கோவிலுக்கென கோவில் எதிரில் சூர்ய புஷ்கரணி எனும் குளம் வெட்டப்பட்டதாக கி.பி.1710 ஆம் ஆண்டுக் கல்வெட்டு தெரிவிக்கிறது. மத்திய தொல்லியல் துறையால் (ASI) பதிவு செய்யப்பட்ட கல்வெட்டுகள் எதுவும் தற்போது அங்கு இல்லை.

சேதுபதி மன்னர்கள் வழங்கிய செப்பேடுகள் மூலம் கோயிலுக்கு அவர்கள் செய்த கீழ்க்கண்ட தானங்கள் பற்றி அறிய முடிகிறது. உடையான் சடைக்கண் சேதுபதி கி.பி.1605 இல் கருப்பூர் கிராமத்தையும் கி.பி.1606 இல் அச்சங்குடி கிராமத்தையும் கி.பி.1615 இல் நாகனேந்தல், இரட்டையூரணி, வல்லடிவாகை ஆகிய கிராமங்களையும் இக்கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளார். கூத்தன் சேதுபதி கி.பி.1623 இல் கேசணி, பில்லூர் கிராமங்களையும், கி.பி.1624 இல் கீரமங்கலம், கீரணி கிராமங்களையும் இக்கோவிலுக்கு கொடையாக  வழங்கியுள்ளார். திருமலை ரெகுநாத சேதுபதி கி.பி.1646இல் ஆதியாகுடி என்ற ஊரை இக்கோவிலுக்கு தானமாக அளித்துள்ளார். இக்கோவிலுக்கு குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி வெளிமுத்தூர் கிராமத்தை கி.பி.1735 இல் தானமாக வழங்கியுள்ளார். சேதுபதிகள் கால ஓவியங்கள் இங்கு உள்ளன.

தேவகோட்டை இராம.அரு.அரு.இராம. குடும்பத்தார் கி.பி.1889இல் ரூபாய் 12 இலட்சம் செலவில் இக்கோவிலைப் புதுப்பித்துள்ளார்கள்.  ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர்  ஆடானை நாயகர் மேல் பதிகம் பாடியிருப்பதாலும், லிங்கத்தின் ஆவுடையார் சதுர வடிவில் உள்ளதாலும் சைவ வைணவ மதங்களின் மறுமலர்ச்சிக் காலமான ஏழாம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியர்களால் இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம். சங்க இலக்கியமான அகநானூறில் சொல்லப்படும் அட்டவாயில் என்ற ஊர் தற்போதைய திருவாடானையே என கூறப்படுகிறது. அட்டவாயில் என்பது போரிட்டு அழிக்கப்பட்ட வாயில் என்று பொருள். 

துண்டுக்கல்வெட்டுகள் 

 திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் சந்நதியின் தெற்கே தரையில் ஒன்றும், அம்மன் சந்நதியின் வடக்கே தரையில் ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாண்டியர் காலக் கல்வெட்டின் துண்டுக் கல்வெட்டுக்களாகக் கூட இருக்கலாம். இதில் தேவன் பொன்னாண்டான், போரிலழகியாள் ஆகிய எழுதப்படிக்கத் தெரியாத இரு தற்குறிகள் குறிப்பிடப்படுகிறார்கள். கணக்கு கூத்தாடுவான், சேனாவரையன், களப்பாளராயன், திருவாடானைத் தாரகண், முதலியார் சிஷ்யர்களும் சிஷ்யர்களின் சிஷ்யர்களும் ஆகிய பெயர்களும் இதில் வருகின்றன. இவை நிலக்கொடை வழங்கிய கல்வெட்டுகளாக இருக்கலாம். மாஞ்சூரில் கி.பி.1296 ஆண்டைச் சேர்ந்த மாறவர்மன் விக்கிரபாண்டியனின்  கல்வெட்டில் களப்பாளராயன் என்பவர் பெயர் காணப்படுகிறது.

ஆடா தொடை

 ஆதியில் தமிழர்கள் மரங்களில் தெய்வம் இருப்பதாக நம்பியதால் ஊரின் நடுவில் மரங்களை நட்டு வணங்கி வந்துள்ளனர். இன்றும் கோவில்களில் தலவிருட்சமாக மரங்களை வழிபட்டு வருவது இதற்கு ஆதாரமாகும். 
ஆடானை என்பதை ஆடா + னை எனப்பிரித்து ஆடா தொடை செடி அதிகமாகக் காணப்பட்ட பகுதி என்ற பொருளில் இவ்வூர்ப் பெயர் அமைந்துள்ளதாகக் கொள்ளலாம். மருத மரங்கள் நிறைந்த ஊர் மருதனை எனவும், உஞ்சமரங்கள் (ஊசிலை) நிறைந்த பகுதி உஞ்சனை எனவும் அழைக்கப்படுவதை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம். தமிழகத்தின் பல ஊர்ப் பெயர்கள் அந்த இடங்களில் அதிகமாகக் காணப்படும் மரம், செடி, கொடிகளின் பெயர்களால் அமைந்துள்ளதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். 

முத்தூற்றுக் கூற்றம்

இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருவாடானை, தொண்டி, கப்பலூர், விளமர், திருப்புனவாசல் ஆகிய ஊர்கள் முத்தூற்றுக் கூற்றம் எனும் நாட்டுப் பகுதியில் இருந்துள்ளன. 
சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் உள்ள கி.பி.5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த களப்பிரர் காலக் கல்வெட்டில் முத்தூற்றுக் கூற்றத்தில் விளமர் எனும் ஊரில் இருந்த  தேவகுலம் (கோயில்) குறிப்பிடப்படுகிறது. திருவாடானையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூர் தற்போது வீளிமர் எனப்படுகிறது.
இராஜசிங்கமங்கலம் அருகே அறுநூற்றுமங்கலம், திருவாடானை அருகில் அறுநூற்றுவயல் ஆகிய ஊர்கள் வணிகர்களின் பாதுகாப்பு வீரர்களான அறுநூற்றுவர்களின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளன.  திருவாடானை அருகில் உள்ள பாரூரில் பதினெண்பூமி எனும் வணிகர் மற்றும் அவர்களின் பாதுகாப்பு வீரர் கொண்ட குழுவினரின் குடியிருப்பு உருவானபின் அவ்வூர் பதினெண்பூமிநல்லூர் என மாற்றப்பட்டதை அறுநூற்றுமங்கலம் கல்வெட்டு தெரிவிக்கிறது.



வே.இராஜகுரு,
தலைவர்,
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.