ஈழத்தின் மீது சோழர்கள் படையெடுக்க காரணம்?? அறியாத தகவல்கள்..!

ஈழத்தின் மீது சோழர்கள் படையெடுக்க காரணம்?? அறியாத தகவல்கள்..!


கி.பி 9ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து ஈழம் நோக்கி ஏற்பட்ட படை எடுப்புகள் பற்றிய சான்றுகள் சூளவம்சத்தில் காணப்படுகின்றன. இப்படை எடுப்புக்களும் ஈழத்தில் தமிழர் செல்வாக்கினை மேலும் அதிகரித்தன எனலாம். 


தமிழ் படை எடுப்புகளில் முதலில் இடம் பெறுவது பாண்டிய மன்னனாகிய சிறீமாற சிறீவல்லப (கி.பி 835 - 862) தலைமையில் ஏற்பட்ட படை எடுப்பாகும். அக்காலத்தில் அநுராதபுரத்தில் அரசாண்ட மன்னன் முதலாவது சேனன் (கி.பி 833 - 853) ஆகும். பாண்டிய மன்னனுடைய படை எடுப்பு ஈழத்தின் வட பகுதியூடாகவே நடந்ததென்றும் அப்போது இப்பகுதித் தமிழர்கள் இவனுக்கு உதவினர் எனவும் சூளவம்சம் கூறுவதை நோக்கும் போது இவர்கள் பெற்றிருந்த செல்வாக்குப் புலனாகின்றது அநுராதபுரம் இப்படை எடுப்பின் போது சூறையாடப்பட்டது. இப்படை எடுப்பைச் சமாளிக்க முடியாத முதலாவது சேனன் தலைநகரை விட்டு மலையகத்திற்குச் சென்று ஒளித்துக்கொள்ள இவனின் சகோதரனான யுவராஜன் மகிந்தன் இப்படை எடுப்பினால் ஏற்பட்ட அவமானத்தினைத் தாங்கமுடியாது தற்கொலை செய்து கொண்டாலும் இறுதியில் முதலாவது சேனன் பாண்டிய மன்னனுடன் சமாதானம் மேற்கொண்டான்.


பாண்டியர் வலியிழக்க எழுச்சி பெற்ற சோழ வம்சத்தவனாக முதலாவது பராந்தகன் காலத்தில் சோழர்கள் சேர பாண்டிய வம்சங்களை வெற்றி கொண்டனர். தமிழகத்தில் சோழருக்கெதிரான போரில் பாண்டிய மன்னனாகி மூன்றாம் இராஜ்சிம்மன் சிங்கள மன்னனிடம் உதவிகேட்டு போரிட்டாலும் இறுதியில் சிங்கள பாண்டியப்படை தோல்வியையே தழுவியது. சிங்களப் படை வெறும் தோல்வியை மட்டும் தழுவவில்லை. பாண்டியருக்கு உதவி செய்யச் சென்றதால் சோழரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டது. இதன் விளைவுயாதெனில் ஈழத்தின்மீது ஏற்பட்ட சோழப்படை எடுப்பாகும். 


பாண்டியரை வென்ற பராந்தகச் சோழன் பாண்டி நாட்டின் தலைதகராகிய மதுரையில் முடிசூட எண்ணியபோது பாண்டிய மன்னனின் முடியும் பிற அணிகலப் பொருட்களும் ஈழத்தரசனிடம் அடைக்கலமாவைக்கப்பட்டதை அறிந்து அதனை ஒப்படைக்குமாறு அப்போது ஈழத்தரசனாகி விளங்கிய நான்காவது உதயனிடம் கேட்க, அவன் மறுக்கவே ஈழத்தின்மீது படை எடுத்தான் சோழர் சிங்களப் படையுடன் ஈழத்தில் மேற்கொண்ட போரில் சிங்களப்படை தோல்வியைத் தழுவியதோடு உதயனும் உரோகணைக்குச் சென்று ஒளித்துக் கொண்டான சோழப்படையோ எனில் ஈழத்து மன்னனைக் கைப்பற்றாது நாடு திரும்பியது. இதற்குக் காரணம் அக்காலத்தில் சோழ நாட்டின் மீது ஏற்பட்ட ராஷ்ட கூடப்படை எடுப்பாகும். 


ஈழநாட்டுப் போரில் சோழமன்னன் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து 'மதுரையும் ஈழமும்' கொண்ட கோப்ரகேசரிவர்மன் எனப் பெயர் சூடினான் எனினும் மறுபடியும் ஈழத்தினைக் கைப்பற்று நோக்கமாக இரண்டாவது பராந்தகன் (கி.பி956 - 973) காலத்தில் இப்படை எடுப்பை வழிநடத்தி வந்த சோழச் சேனாதிபதியாகிய 'கிறிய வேளார்' ஊராத்துறையில் நடைபெற்ற போரில் மரணமடைந்தான். இதன் பின்னர் சோழ அரசன் ஈழத்தரசனுடன் சமாதானம் செய்து கொண்டான் எனச் சூளவம்சம் குறிப்பிடுகின்றது.


எனினும் நான்காவது மகிந்தன் (கி.பி956 - 572) இப்பகுதியில் மேற்கொண்ட நிருவாக நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. இருந்தும் இவனுக்குப் பின்னர் அநுராதபுரத்திலரசாண்ட மன்னர்களான ஐந்தாவது சேனன் (கி.பி.972 - 981), ஐந்தாவது மகிந்தன் (கி.பி 981- 1017) போன்றோர் வலிமையற்றுக் காணப்பட்டனர். இவர்கள் காலத்தில் அநுராதபுரத்தில் தமிழர் மட்டுமன்றிக் கேரளர் போன்றோரும் காணப்பட்டனர். இப்படையினருக்குக் கொடுக்க வேண்டிய வேதனத்தினை ஐந்தாவது மகிந்தன் கொடுக்காது விடவே அவர்கள் மேற்கொண்ட கிளர்ச்சியிலிருந்து தப்புவதற்காக உரோகணைக்குச் சென்று இம்மன்னன் ஒளித்துக் கொண்டான் எனக் கூறப்படுகின்றது. இத்தகைய சூழலிற்றான் சோழப் பெருமன்னனாக முதலாவது இராஜராஜனின் (கி.பி 993 ) கீழ் அநுராதபுரத்தின் மீது சோழப்படை எடுப்பு ஏற்பட்டது அநுராதபுரம் அழிக்கப்பட அநுராதபுர அரசின் வரலாறும் அஸ்தமனமானது இது ஈழத்து வரலாற்றின் இன்னோர் காலகட்டமாகிறது. அதன் பிறகு இராஜேந்திரன் சோழன் காலத்தில் ஒட்டுமொத்த இலங்கை தீவும் சோழர்களின் மேலாண்மையின் கீழ் வந்தது.