மரவழிபாடு என்பது மிகத் தொன்மையான வழிப்பாட்டு முறையாகும்.

கந்து வழிபாடு 
இறை உறையும் மரங்கள்

மரவழிபாடு என்பது மிகத் தொன்மையான வழிப்பாட்டு முறையாகும்.

கிராமப்புறங்களில் இறை வழிப்பாட்டினை குறிக்கும் விதமாக கந்து எனும் சொல் பயன்பட்டிருக்கிறது.

"கந்து" என்பது தடித்த குட்டையான மரக்கம்பத்தை அல்லது தூணை குறிக்கும் சொல்.  நன்கு வளர்ந்த மரத்தின் அடிமரத்தை விட்டுவிட்டு மேற்பரப்பை வெட்டி நீக்கிய பின் எஞ்சியுள்ள தூண் போன்ற அடிமரம் தான் கந்து எனப்படும்

இறை என்பது மரங்களில் உறைந்துள்ளது எனவும் அதிலும் குறிப்பாக கந்து எனப்படும் அடிமரத்தில் உறைந்துள்ளது என்பது சங்ககாலம் தொட்டே மக்களிடம் நிலவி வரும் நம்பிக்கை

கீழ்காணும் சங்கப்பாடல்கள் இக்கருத்திற்கு வலுவூட்டுகின்றன

"தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்.."
அகநானூறு/309
(தெய்வம் வாழும் பருத்த அடிமரத்தை உடைய வேப்பமரம்)

"கடவுள் மரத்த முள்மிடைக் குடம்பை.."
அகநானூறு/270
( கடவுள் உறையும் மரத்தின்கண் முள்ளால் கட்டப்பெற்ற கூடு)

"கடவுள் முதுமரத்து உடன் உறை பழகிய.."
நற்றிணை/83
(பெருங்கடவுள் தங்கியுறையும் பழைய மரம்)

"மரைஏறு சொறிந்த மாத்தாட் கந்தின்.."
அகநானூறு/287
(ஆண்மான் தனது தினவு தீர்வதற்கு உராய்ந்தமையால் அசையும் தன்மையுடைய கரியநிற அடியினைக் கொண்ட கந்தினையுடைய மரம்)

இன்றும் கிராமப்புறங்களில் மக்கள் மரத்தின் அடிப்பகுதியினை ( கந்து) சுற்றி மஞ்சள் அல்லது சிவப்பாடை கட்டுவித்து மங்கலப்பொருட்கள் இட்டு வழிபடும் சங்க கால எச்சத்தினை காண முடிகின்றது


நன்றி :

முனைவர் தவசிமுத்து மாறன்,
Ponnambalam Chidambaram