ராஜபாளையம் அருகிலுள்ள "சோலைச்சேரி" ஊரில் உள்ள கல்வெட்டு

திரு வாணாத தேவர் கல்வெட்டு. 
●~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~●

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள "சோலைச்சேரி" ஊரில் உள்ள இக்கல்வெட்டு சேத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட அரசாகிய ராஜஸ்ரீ திரு வாணாத சேவகப்பாண்டிய மகாராஜா பற்றிய தகவலைத் தருகிறது. 

கல்வெட்டு வாசகம். 
- - - - - - - - - - - - - - - - - 

1. ஶ பாண்டி விநாயகர் துணை
2. சேத்தூர் மகாராஜா ௵ வடம
3. லை திரு வாணாத சேவகப் பாண்
4. டிய மகாராஜா அவர்களின் 
5. அனுக்கிரகத்தினால் சோலை சே
6. ரி வடுகாயர் பெத்த நல்லு
7. நாயக்கர் மகன் பெத்த நல்லு
8. நாயக்கர் உபயம்
9. கொல்லம்௯௩ஶபங்குனி.
 
{இறுதிப் பகுதி உடைந்துள்ளது}

கல்வெட்டு செய்தி.
- - - - - - - - - - - - - - - - -

சோலைச்சேரி ஊரைச் சேர்ந்த வடுகாயர் சமூகமாக  அறியப்பட்ட, தெலுங்கு இடையர் ஜாதியைச் சேர்ந்த பெத்தநல்லு நாயக்கர் மகனாகிய பெத்த நல்லு நாயக்கர் சேத்தூர் அரசராகிய ஸ்ரீ ராஜஸ்ரீ
"திரு வாணாத சேவகப்பாண்டிய மகாராஜா" அவர்கள் அருளால் எழுப்பிய கோயிற் பணியைச் சுட்டுகிறது.  கல்வெட்டு அருகிலேயே பெத்த நல்லு நாயக்கர் மற்றும் அவரது மகனான மற்றொரு பெத்த நல்லு நாயக்கர் இருவரும் நின்று வணங்கிய நிலையில் சிலைவடிவமாகக் காணப்படுகின்றனர். 

கல்வெட்டு காட்டும் வரலாறு. 
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
 சேத்தூர் மன்னர்கள் தென்தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பான வரலாற்றிற்குச் சொந்தக்காரர்கள். மறவரில் "வணங்காமுடி பண்டார மறவர்கள்" என வழங்கப்படும் 'பொக்கிஷதார மறவர்' பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களை வாணர்குலமாகிய வாணாதிராயர் வம்சத்தவர் என உறுதி செய்யும் வகையிலான பல்வேறு சான்றுகள் தற்காலத்தில் கிடைத்த வண்ணம் உள்ளன. அதில் ஒன்றாகவேஇந்த 18ம் நூற்றாண்டு கல்வெட்டையும் கருதவேண்டியுள்ளது. இதில் வாண குலத்திற்கே உரிய "திரு வாணாத " எனும் அடைமொழியால் அவர்கள் அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத் தொல்லியல் ஆய்வாளர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட்டு வரும். திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஏற்கனவே வாணாதிராயர்களுக்கு, "மறத்திரு வாணாதிராயர்கள்" -என குறிப்புகள் உள்ளதாகக் காட்டுகின்றார். இதற்கு வலுவைக் கூட்டும் விதமாக இந்த கல்வெட்டு, மறவர் ஜாதியைச் சேர்ந்த சேத்தூர் அரசர்களை "திரு வாணாத சேவகப்பாண்டிய மகாராஜா " என வழங்கி அமைந்துள்ளது . மேலும் இப்பெயர் இந்த அரசவழியினருக்கு காலந்தோறும் அடைமொழி முன்னொட்டுப் பெயராக தொடர்ந்து வழக்கில் இருந்து வரும் பெயராகவே உள்ளமையை வரலாறு உணர்த்துகிறது.  

நெல்லையில் "தச்சனூர் அருளாளன் சேவகத்தேவன்" என வாணாதிராயர் ஒருவரை தனது பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள் எனும்நூலில்முனைவர்.திரு.வேதாச்சலம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். "சேவகத்தேவன்" எனும் பட்டமும் சேத்தூர் அரசர்கட்கு வழங்கிவருவதும் நாம் கண்கூடாகக் காணும் உண்மை ஆகும். 
 மேலுள்ள கல்வெட்டில் சேத்தூர் அரசர்களுக்காக வடுகாய நாயக்கர் சமூகத்தின் பெத்த நல்லு நாயக்கர் மகனாகிய பெத்த நல்லு நாயக்கர்  {தகப்பனார் -மகன் இருவருக்கும் ஒரே பெயர் }தமது விசுவாசத்தால் செய்த அறச்செயல் அறியவருகிறது.  இது மதுரை நாயக்கர் மேலாண்மையை ஏற்காது வாணாதிராயர் கீழ் தம்மை பணித்துக்கொண்ட தும்பிச்சி நாயக்கரை நமக்கு ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது.  வாணர்களுடைய வரலாறு முழுமையடைய வேண்டுமெனில் ,வத்திராயிருப்பு -சேத்தூர் - கொல்லங்கொண்டான்- தலைவன்கோட்டை -சங்கரன்கோயில் பகுதி மறவர்கள் பற்றி ஆய்வுகள் முழுமையடைய வேண்டியது இங்கு அவசியமாகிறது. 

நன்றி! 

கல்வெட்டு படம் உபயம்: திரு. Ra Ja  @ தென்கரை மஹராஜ பாண்டியன் அவர்கள்  {கடம்பூர் -சொக்கம்பட்டி வாரிசுதாரர் }

அன்பன்.கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.