தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளை வெட்டியவர் யார்!

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளை வெட்டியவர்!

தஞ்சை பெரியகோவில் கல்வெட்டுகள் உலகப் பிரசித்தம். மிக அழகாக கணினியில் தட்டச்சு செய்தது போன்று ஒவ்வொரு வார்த்தைக்கும் சரியான இடைவெளியில் அமைந்திருக்கும். கோவில் கட்டிய பிறகே கல்வெட்டுகள் வெட்டப்பட்டிருப்பதால் கவனக் குறைவால் தவறாக வெட்டினால் மாற்றவும் முடியாது.

ஆயிரமாண்டுகள் ஆகியும் இன்னமும் தெளிவாக இருப்பதிலிருந்து ஒவ்வொரு எழுத்தும் ஒரே அளவில் ஆழமாகவும் அழகாகவும் வெட்டப்பட்டிருப்பதை நினைத்தாலே அதிசயமாக இருக்கும். இவ்வளவு சிறப்பானக் கல்வெட்டுகளை வெட்டியவர் ராஜராஜருடைய குதிரை படை வீரனும் கூட...! 

தஞ்சை பெரிய கோவிலின் அம்மன் சன்னதிக்கு பின்புறம் உள்ள திருச்சுற்று மாளிகையின் வடபுற சுவரில் உள்ள கல்வெட்டொன்று இக்கல்வெட்டுகளை வெட்டியவர் இரவி பாளூருடையார் என்னும் சிறப்பான விஷயத்தை தெரிவிக்கிறது.

இணைக்கப்பட்டுள்ள கல்வெட்டின் வரிகளை பார்ப்போம்... 

"ஸ்வஸ்தி ஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜராஜீச்சரமுடையார்க்கு ஸ்ரீகார்யம் செய்கின்ற ஆற்றூருடையான் நக்கன் தோன்றி உடையார் கோயிலில் திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து உமாபரமேஸ்வரியார்க்கு உடையார் ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது வரை குடுத்தன கல்லில் வெட்டியபடி ஆலயத்து உமாபரமேஸ்வரியார்க்கு சாத்தியருள குடுத்த தாலி ஒன்று பொன் ஆடவல்லானால் ஒரு கழஞ்சரை இவர்க்கே ஸ்ரீராஜராஜதேவர் சிறுதனத்து இரட்ட குலகால தெரிந்த உடநிலை குதிரைச் சேவகரில் உடையார் கோயிலில் கல்லில் எழுத்து வெட்டுவிக்கின்ற அருமொழி தேவ வளநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து சாத்தங்குடி வெள்ளாளன் இரவி பாளூருடையார் 
ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு மூன்றாவது வரை குடுத்த பட்டைக்காரை ஒன்று பொன் ஆடவல்லான் என்றும் கல்லால் நிறை முக்காலே மூன்று மஞ்சாடி"

இக்கல்வெட்டிலே முதலில் வரும் கோவிலின் ஸ்ரீகார்யமான ஆற்றூருடையான் நக்கன் தோன்றி  என்பவர் பரிவாராலயத்து உமா பரமேஸ்வரியாருக்கு கொடுத்த தாலி பற்றியும் அதன் பின் இரட்ட குலகால தெரிந்த உடநிலை குதிரை சேவகரில் உடையார் கோயிலில் 'எழுத்து வெட்டுவிக்கின்ற' அருமொழிதேவ வளநாட்டு வண்டாழை வேலூர் கூற்றத்து சாத்தன்குடி வெள்ளாளன் இரவிபாளூருடையார் கொடுத்த நிவந்தமான பட்டைக்காரை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு அழகான தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு எழுத்துக்களின் படைப்பாளி இரவி பாளூருடையார் என்பவரே என்பது  இக்கல்வெட்டு மூலம் தெளிவாகிறது.

அதுமட்டுமின்றி மற்றுமொரு கவனிக்கத்தக்க விஷயம், இப்போதுள்ள அம்மன் ஆலயம் பதினான்காம் நூற்றாண்டில் எடுக்கப்பட்டது தான். அதற்கு முன் திருச்சுற்று மாளிகையிலிருந்த உமா பரமேஸ்வரியார் ஆலயமே அம்மன் ஆலயமாக இருந்திருக்க வேண்டும். அந்நியர் (மாலிக் காபூராக இருக்கலாம்) படையெடுப்பால் அம்மன் ஆலயமும் திருச்சுற்று மாளிகையும் வெகுவாக சிதிலமடைந்து செல்வங்களும் கொள்ளைப் போக, அதன் பின் வந்த ஒரு பாண்டிய மன்னன் (மாறவர்மன் ஸ்ரீவல்லபனாக இருக்கலாம்) உமா பரமேஸ்வரி ஆலயத்துக்கு முன்பாக அம்மனுக்கு தனி ஆலயம் எடுத்திருக்கக் கூடும் என்பது ஆய்வாளர் சிலரின் கருத்தாகும். சிறப்புக்குரிய இக்கல்வெட்டை நமது "வாழும் சோழப்பெருங்கோவில்கள் மரபுநடை"யினில் காணலாம்