காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அரசர் கோயில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கருவறை வடக்கு முப்படைக் குமுதம் மற்றும் மேற்கு பட்டிகையில் பொறித்த 3 வரிக் கல்வெட்டு.

நன்றி : சேசாத்திரி ஸ்ரீதரன் 

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அரசர் கோயில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கருவறை வடக்கு முப்படைக் குமுதம் மற்றும் மேற்கு பட்டிகையில் பொறித்த 3 வரிக் கல்வெட்டு.

ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடைபன்மர் திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு [ப]தினைஞ்சாவது மீந நாயற்று அபரபக்ஷத்து ஸப்தமியு[ம்] ச[னி]க்கிழமையும் பெற்ற [ஸ்வா]தி நாள் _ _ _ _ த்த ஸ்வதுர்வேதிமங்கலத்துப் பிடாகை மாத்தூர் ஸபை. [இவ்]வூர் திருவரசுர நாயனார் கோயிலில் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வார்க்கு ஸ்ரீ ஸேனாபதிப் பெருவிலை ஆக விற்றுக் குடுத்த பரிசாவது, இவ்வூர் ஸபையாரில் காஞ்சி சொக்கத் தேவரான [மூ]த்த வாமன பட்டன் பதினாலாவது வரையும் உழுது தன் பேர்க்கடமை செலவறாதே ஓடிப் போகையில். இவன் பேர்க்கடமைக்கு சேர்வை என்று எங்களை இப்பணம் _ _ _


_ _ ன்று கோமுள்ள மாவிஸனம் பண்ணுகையாலே. எங்களுக்கு _ _ ங்க _ _ _ பாத்தி இல்லாதப்படியாலே _ _ _ _ _இதர்க்கு தேவரான [உ]த்த[ம] வாமன பட்டன் உள்ளிட்ட _ _ _ _ _ன நிலமான மேலைப்புதுத் திரு ந_ _த்து _ _ _சி குருகூர் ஸ்ரீ  சவ_மம் ப்ரயாகைத் திருப்பொரி பட்டன் உள்ளிட்டார் இராசேந்த்ர விளை நிலமான முன் மடைப் புதுத்திருத்து நந்த[கஸ]ம். வெண்ணைக் கூத்தன் _ _ _ தனால் இன்னிலம் ஒன்றே இரண்டு மாவுக்கும் பெறும் வஸ ஆக நிச்சயித்த அன்றாடு நற்காசு வாசிபடர் வராகன் பணம் 27


[இரு]பத்தேழும் விலையாவதாகவும். இப்படி சம்மதித்து மாத்தூர் [எ]ழுவாத நா[ய]னார்க்கு ஸ்ரீவேதநாயகனும் இவற்கு விலை ஆக விற்றுக் குடுத்தோம் மாத்தூர் ஸபை ஊரோம். இப்படிக்கு இவை _ _ _ ஞ்சி இவாய்வ _ _ _ _ன் பட்டன் எழுத்து. இப்படிக்கு இவை வங்கிப்புறத்து திருவேங்கட பட்டன் எழுத்து. இப்படிக்கு இவை ஆதன்பாக்கத்து திருவேங்கட பட்டன் எழுத்து. இவர்கள் சொல்ல இப்ரமாணம் எழுதினேன் ஸ்ரீ சுத்தவல்லிச் சருப்பேதி மங்கலத்து உய்ய வந்த பெருமாள் கோயில் வீற்றிருந்தான் பட்டனேன். இவை என் எழுத்து.


சேனாபதி ஆழ்வார் – விஷ்வக்சேனர். சிவன் கோவிலில் ஆதிசண்டேசுவரரை முதலில் வணங்குவது போல் பெருமாள் கோவிலில் விஷ்வக்சேனரை முதலில் வழிபடுவர். இவரை சேனை முதலி என்பர்; பிடாகை – ஒரு கோவில் ஊரின் பின்புறத்தே (backyard) அமைந்த உட்கிடையூர், a small village at the backyard of a bigger village; சபை – சதுர்வேதிமங்கலம், பிடாகை ஆகியவற்றின் ஊரவை; பேர்க்கடமை செலவறாதே – தன்பெயரில் ஏற்பட்ட அரசுக்கு கட்ட வேண்டிய வரியை செலுத்தாமல்; சேர்வை – தொண்டு, ஊழியம்; மாவிஸனம்- பெருந் தொல்லை; பாத்தி – பொறுப்பாதல், பிணையாதல், பங்கு.

விளக்கம்:  சடவர்ம சுந்தர பாண்டியதேவர்  15- ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1265) காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அரசர் கோவிலில் தேய்பிறை ஏழாம் நாள் சனிக்கிழமை சுவாதி நட்சத்திரத்தன்று மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து வட பிடாகையான மாத்தூர் எனும் அரசர் கோயில் ஊரின் ஊரவையர் கூடினர். "மாத்தூர் பிடாகையின் திருவரசுரம் பெருமாள் கோயிலில் சேனாபதி ஆழ்வாரான விஷ்வகசேனரை வணங்கி பெருவிலையாக நிலம் விற்றுக் கொடுத்த விவரம் என்னவெனில், இவ்வூரின் ஊரவை உறுப்பினனான காஞ்சி சொக்கத் தேவரான மூத்த வாமன பட்டன் சுந்தர பாண்டியனின் 14- ம் ஆட்சி ஆண்டு வரை இவனுக்கான நிலத்தை உழுது பயன்கொண்டான். ஆனால் 15 –ம் ஆட்சி ஆண்டில் தன் பேரில் அரசுக்குக் கட்ட வரிஇனங்களைக் கட்டாமல் எங்கோ சென்று மறைந்தான். இதனால் இவன் பெயரில் உள்ள வரிகளைத் கட்டுவது தொண்டு, ஊழியம் என்றெல்லாம் சொல்லி எங்களைக் கட்டும்படி தொடர்ந்து பெருந் தொல்லை கொடுத்து வருகின்றனர். எங்களுக்கு அவனது வரியைக் கட்ட வேண்டிய பொறுப்போ பிணையோ இல்லாமையால் இதற்கு தேவரான உத்தம வாமன பட்டன், பிரயாகை திருப்பொரி பட்டன் உள்ளிட்டோர் வெண்ணைக் கூத்தன் என்பவனுக்கு ஒன்றே இரண்டு மா அளவுள்ள மூத்த வாமன பட்டனின் நிலத்தை அன்றாடு நற்காசு வாசிபடவர் வராகன் பணம் 27 க்கு விற்றுவிட ஒப்புக் கொண்டனர்.” பிற பட்டர்களும் இதற்கு ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.

மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்தின் வட பிடாகையான மாத்தூர் ஒரு வைணவ தளம். இக்கோவிலில் பணியாற்றும் பிராமணருக்கும் மற்ற கோவில்களில் உள்ளது போல கோவில் அருகிலேயே வீடுகள் அமைந்திருக்க வேண்டும். எனவே பிடாகைகளில் வைணவக் கோவில்கள் அறவே இருந்ததில்லை. பிராமணர் வீடுகளும் இல்லை, பிராமணர் சதுர்வேதி மங்கலத்தில் வாழ்ந்துகொண்டு பிற உழைக்கும் மக்களை பிடாகைகளுக்கு ஓரங்கட்டித் தாழ்வுபடுத்தி சமூகப்பிரிவினையை ஏற்படுத்திய புறச்சேரியே பிடாகைகள் என்ற அலிகார் பல்கலைக்கழக இணைப் பேராசிரியை சாந்தினி பீயின் கருத்தை இக்கல்வெட்டு சுக்கு நூறாக உடைத்தெறிவது நமக்குக் கண்கூடாகத் தெரிகின்றது.

பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் – IV, பக்கம் 109-110, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.